மெட்ராஸ் கலைக் கல்லூரி
இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக மெட்ராஸ் கல்வி மையமாக இருந்து வருகிறது. இந்த ஊரில்தான் எத்தனையெத்தனை விதமான கல்வி கற்பிக்கப்படுகிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறது.
இந்த நகரத்தில் சினிமா முதல் போர்க்கலை வரை, கால்நடை முதல் கர்னாடக இசை வரை அனைத்தையும் கற்பிக்கத் தனித்தனிக் கல்லூரிகள் உள்ளன. கலையை ஒரு பாடமாகச் சொல்லிக்கொடுப்பது என்று முடிவெடுத்த நகரம் மெச்சத்தக்கது தான். கலையே ஒரு நாட்டின் பிரதிபலிப்பு. அடிமை நாட்டுக்கு எதற்கு இதெல்லாம் என்று வெள்ளையர் நினைக்கவில்லை. அவர்கள் தொடங்கிய அரசு கலை மற்றும் கைவினைக் கல்லூரி, எழும்பூரில் அமைந்தது. இது நாட்டிலேயே கலை கற்பிக்கும் ஆரம்ப நிறுவனங்களில் ஒன்றாகும்.
ஆரம்பகால மெட்ராஸில் தங்கியிருந்த மருத்துவர்கள் பலர் மருத்துவம் அல்லாத இதர துறைகளில் ஆர்வமுள்ள பன்முக வல்லுநர்கள். அப்படித்தான் அலெக்சாண்டர் ஹண்டர் என்ற ஒரு மருத்துவர் திறமையான ஓவியர். ஹண்டர் புகைப்படம் எடுத்தல் என்ற அப்போதைய காலத்தில் தோன்றிய புதிய கலையில்கூட ஆழ்ந்த ஆர்வம் கொண்டு மெட்ராஸ் போட்டோகிராஃபிக் சொசைட்டியை நிறுவினார்.