தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியை தென் ஆப்பிரிக்க அணியும், இரண்டாவது டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து அணியும் வென்றது.
இங்கிலாந்து-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 36.2 ஓவரில் 118 ரன்னில் சுருண்டது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 158 ரன்களில் ஆல் அவுட்டானது.
இதையடுத்து 2-வது இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 169 ரன்னில் சுருண்டது. இதையடுத்து, 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது.
4-ம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 97 ரன்கள் எடுத்துள்ளது. இன்று இறுதி நாள் ஆட்டம் நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவின் 2-வது இன்னிங்சில் கேப்டன் டீன் எல்கரின் விக்கெட்டை இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் வீழ்த்தினார்.
இந்த விக்கெட் டெஸ்ட் கிரிக்கெட்டில் பிராட்டின் 564-வது விக்கெட் ஆகும். இதன் மூலம் அவர் டெஸ்ட் கிரிகெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய 2-வது வேகப்பந்து வீச்சாளர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார். இதுவரை 2-வது இடத்தில் இருந்த கிளென் மெக்ராத்தை (563 விக்கெட்) பின்னுக்கு தள்ளினார்.
இந்த இன்னிங்சில் பிராட் மொத்தம் 3 விக்கெட் வீழ்த்தினார். ஒட்டுமொத்தமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் விவரம்:-
முத்தையா முரளிதரன் – 800 விக்கெட்
ஷேன் வார்னே – 708 விக்கெட்
ஜேம்ஸ் ஆண்டர்சன் – 667 விக்கெட்
அனில் கும்ப்ளே – 619 விக்கெட்
ஸ்டூவர்ட் பிராட் – 566 விக்கெட்
கிளென் மெக்ராத் – 563 விக்கெட்