Tamilசெய்திகள்

மெகுல் சோக்சிக்கு ஜாமீன் வழங்க மறுத்த பெல்ஜியம் நீதிமன்றம்!

இந்தியாவை சேர்ந்த பிரபல வைர வியாபாரிகளான நீரவ் மோடி, அவரது உறவினர் மெகுல் சோக்சி ஆகியோர் மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14 ஆயிரம் கோடி கடன் பெற்று அதை திருப்பி செலுத்தாமல், 2018-ம் ஆண்டு வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றனர்.

இது தொடர்பாக அமலாக்கத் துறை மற்றும் சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இதற்கிடையே கரீபியன் நாடான ஆண்டிகுவாவில் இருந்த மெகுல் சோக்சி, 2021ம் ஆண்டு டொமினிகா நாட்டிற்கு தப்பிச் சென்றார்.

அங்கிருந்து ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் கடைசியாக மெகுல் சோக்சி தஞ்சம் அடைந்தார். மெகுல் சோக்சியின் மனைவி பிரீத்தி, பெல்ஜியம் குடியுரிமை பெற்றவர் என்பதால் அதன்மூலம் மெகுல் சோக்சியும் பெல்ஜியத்தின் தற்காலிக குடியுரிமையை பெற்றார். மெகுல் சோக்சி எதிராக இரண்டு பிடிவாரண்ட்டுளை மும்பை நீதிமன்றம் கடந்த 2018 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் பிறப்பித்தது.

இந்நிலையில் புற்று நோய் சிகிச்சைக்காக சுவிட்சர்லாந்து மருத்துவமனைக்கு மெகுல் சோக்சி செல்ல திட்டமிட்டு இருந்த நிலையில், அவரை பெல்ஜியம் போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து பெல்ஜியம் சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், ஜாமின் கோரி பெல்ஜியம் நீதிமன்றத்தில் மெகுல் சோக்சி மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மெகுல் சோக்சிக்கு ஜாமீன் வழங்க மறுத்துள்ளது. இதனிடையே மெகுல் சோக்சியை இந்தியாவுக்கு நாடுகடத்துவதற்கான பணியை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.