மெகபூபா முப்தியை சிறையில் அடைக்க வேண்டும் – பா.ஜ.க தலைவர் வலியுறுத்தல்
ஜம்மு காஷ்மீரில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயக கட்சியின் (பிடிபி) தலைவருமான மெகபூபா முப்தி, 14 மாதங்களுக்கு பிறகு கடந்த 13ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். அதன்பின்னர் அவர் முதல் முறையாக நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சுதந்திர, ஜனநாயக, மதச்சார்பற்ற இந்தியாவுடன் தான் தங்களுக்கு இணக்கம் என்றும், இன்றைய இந்தியாவுடன் சவுகரியமாக இல்லை என்றும் கூறினார்.
ஜம்மு காஷ்மீர் மாநில கொடியை மீண்டும் கொண்டு வராமல் வேறு எந்த கொடியையும் உயர்த்தப் போவதில்லை என்றும் அந்தக் கொடியை கொண்டு வந்தால்தான் தேசியக்கொடியை உயர்த்துவோம் என்றும் கூறினார். இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவரது பேச்சுக்கு பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநில பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா கூறியதாவது:-
மெகபூபா முப்தியின் தேசத்துரோகக் கருத்துக்களைக் கவனத்தில் கொள்ளும்படி துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவை கேட்டுக்கொள்கிறேன். தேசத்துரோக செயலுக்காக அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைக்க வேண்டும்.
நமது தேசியக்கொடி மற்றும் தாய்நாட்டிற்காக எங்கள் ரத்தத்தின் ஒவ்வொரு துளியையும் தியாகம் செய்வோம். ஜம்மு-காஷ்மீர் நம் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாகும். எனவே ஒரே ஒரு கொடியை மட்டுமே ஏற்ற முடியும். அதுதான் தேசியக் கொடி.
கடந்த ஆண்டு ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை அகற்றுவதற்காக மத்திய அரசு எடுத்த முடிவை மாற்றியமைக்க முடியாது. காஷ்மீர் மக்களைத் தூண்ட வேண்டாம் என்று மெகபூபா முப்தி போன்ற தலைவர்களை நான் எச்சரிக்கிறேன். அமைதி, இயல்புநிலை மற்றும் சகோதரத்துவத்திற்கு இடையூறு செய்வதற்கு நாங்கள் யாரையும் அனுமதிக்க மாட்டோம். ஏதேனும் தவறு நடந்தால், அதன் விளைவுகளை அவர் (மெகபூபா) எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மெகபூபாவின் கருத்துக்கள் சகிப்புத்தன்மையற்றவை மற்றும் எந்தவொரு சமூகத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சர்மா கூறினார்.