Tamilசெய்திகள்

மூன்று நாட்களில் அரசு பேருந்துகளில் 4 லட்சம் பேர் பயணம்!

சென்னையில் வார விடுமுறை, பவுர்ணமி கிரிவலம், தமிழ் புத்தாண்டு ஆகியவற்றை முன்னிட்டு தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் இன்று வரை வழக்கமாக இயக்கப்படும் அரசு பஸ்களுடன் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.

கடந்த 11-ந்தேதி முதல் நேற்று வரை வழக்கமாக இயக்கப்படும் அரசு பஸ்களுடன் கூடுதலாக சுமார் 1,900 அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த 3 நாட்களிலும் அரசு பஸ்களில் மொத்தம் 4 லட்சம் பேர் சென்னையில் இருந்து தங்களின் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர். பங்குனி மாத பவுர்ணமி கிரிவலம் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு விழாவையொட்டி சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னை கிளாம்பாக்கம், மாதவரம் ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து 877 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த பஸ்கள் மூலம் 52 ஆயிரம் பயணிகள் திருவண்ணாமலைக்கு பயணம் மேற்கொண்டனர். எனவே கடந்த 3 நாட்களிலும் அரசு பஸ்கள் மூலம் மொத்தம் 4.50 லட்சம் பயணிகள் வெளியூர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் தொடர்விடுமுறை முடிந்து சொந்த ஊர்களுக்கு சென்ற பொதுமக்கள் இன்று சென்னைக்கு புறப்படுகிறார்கள். ஒரே நாளில் பொதுமக்கள் அனைவரும் மொத்தமாக புறப்படுவதால் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் ரெயில்கள் மற்றும் அரசு பஸ்கள் நிரம்பி வழிந்தன. இதனால் பொதுமக்கள் பலர் சென்னைக்கு திரும்ப ஆம்னி பஸ்களையே நாடியுள்ளனர். இதனால் ஆம்னி பஸ்களில் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து பயணிகள் கூறியதாவது:-

தொடர் விடுமுறை என்பதால் ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குறிப்பாக மதுரையில் இருந்து சென்னைக்கு அதிகபட்சமாக ரூ.6 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. நெல்லையில் இருந்து சென்னைக்கு குறைந்தபட்சமாக ரூ.1,900 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி 4 பேர் கொண்ட குடும்பம் செல்ல ரூ.8 ஆயிரம் செலவழிக்க வேண்டி உள்ளது. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.

இதுகுறித்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கூறுகையில், ‘ஆம்னி பஸ்களுக்கு கட்டண நிர்ணயம் என்பது இல்லை. உரிமையாளர்களே கட்டணத்தை நிர்ணயித்து அதற்குள்ளாகவே பஸ்களை இயக்கி வருகிறோம். கட்டண விவரத்தை இணையதளங்களில் வெளியிட்டு உள்ளோம். நாங்கள் நிர்ணயிக்கும் கட்டணத்துக்கு அதிகமாக வசூலித்தால் நாங்களே புகார் செய்து நடவடிக்கை எடுக்கிறோம்’ என்றனர்.

இதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், ‘ஆம்னி பஸ்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அதிக கட்டணம் வசூலித்தால் பயணிகள் புகார் செய்யும் பட்சத்தில் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகிறோம். பொதுமக்கள் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்களும் விடப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.