கர்நாடக மாநிலம் மைசூருவைச் சேர்ந்தவர் பவித்ரா லோகேஷ். திரைப்பட நடிகையான இவர் தெலுங்கு, கன்னடம், தமிழ் உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்துள்ளார். நடிகை பவித்ரா ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவாகரத்து பெற்றவர். அதுபோல் தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவரும், நடிகர் மகேஷ் பாபுவின் சகோதரருமான நரேஷ், 2 பெண்களை திருமணம் செய்து விவாகரத்து ஆனவர். அவர் 3-வதாக ரம்யா ரகுபதி என்பவரை திருமணம் செய்திருந்தார். தற்போது அவரையும் விவாகரத்து செய்ய விண்ணப்பித்துள்ளார்.
இதையடுத்து பவித்ரா லோகேஷ் முதல் கணவரை விட்டு பிரிந்து, நடிகர் நரேசை ரகசிய திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வசித்து வருவதாக நரேசின் மனைவி ரம்யா ரகுபதி குற்றம் சாட்டியிருந்தார். இதை இருவரும் மறுத்த நிலையில் மைசூருவில் உள்ள ஓட்டலில் இருவரும் தங்கியிருந்தபோது ரம்யா ரகுபதியிடம் வசமாக சிக்கிக்கொண்டனர். இருவரையும் ரம்யா ரகுபதி செருப்பால் அடிக்கபாய்ந்தார் பின்னர் அவரை போலீசார் சமாதானப்படுத்தினர். சில தினங்களுக்கு முன்பு நரேஷ்-பவித்ரா லோகேஷ் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்ட வீடியோவை பகிர்ந்திருந்தனர். இவர்களின் திருமணம் கடந்த சில மாதங்களாக தெலுங்கு பட உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பவித்ரா- நரேஷ் இணைந்து நடித்த ‘மல்லி பெல்லி’ படம் கடந்த மே மாதம் திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் இவர்களின் காதல் கதையை படமாக்கி இருந்ததாக கூறப்படுகிறது. படத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லாததால் பிரபல ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது.
இதையடுத்து இந்த படத்தில் தன்னை இழிவுப்படுத்தும் காட்சிகள் உள்ளதாகவும் ஓடிடியில் இருந்து படத்தை நீக்க வேண்டும் என்றும் நரேஷின் மூன்றாவது மனைவி ரம்யா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதைத்தொடர்ந்து ‘மல்லி பெல்லி’ திரைப்படம் ஓடிடியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.