X

மூன்றாவது நாளாக இன்றும் அமலாக்க துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரான சோனியா காந்தி

சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பி கடந்த 21-ந்தேதி முதல் முறையாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. நேற்று 2-வது முறையாக சோனியா காந்தியிடம் அமலாக்கதுறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இதற்காக சோனியா டெல்லியில் உள்ள அமலாக்கதுறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார்.

நேற்று காலை, மாலை என மொத்தம் 6 மணி நேரம் அவரிடம் இந்த விசாரணை நடந்தது. அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு சோனியா காந்தி பதில் அளித்தார் அந்த பதில்கள் அனைத்தையும் அதிகாரிகள் பதிவு செய்தனர். அப்போது, இந்த சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ரூ. 800 கோடி கை மாறியது தொடர்பாக அவரிடம் அதிகாரிகள் கேள்வி கேட்டனர். அதற்கு அது பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்றும் மறைந்த முன்னாள் காங்கிரஸ் பொருளாளர் மோதிலால் வோராதான் இதனை கையாண்டதாவும் சோனியா காந்தி கூறியதாக தெரிகிறது.

மேலும், சோனியா காந்தியை இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜராகும் படி அமலாக்கதுறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளனர். அதன்படி இன்று காலை 3-வது நாளாக சோனியா காந்தி அமலாக்கதுறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், இன்றுடன் அவருடன் நடந்து வரும் விசாரணை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி சோனியா இல்லத்தில் இருந்து அமலாக்க துறை அலுவலகம் அமைந்துள்ள பகுதி வரை 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இந்த முறைகேடு தொடர்பாக காங்கிரஸ் செயலாளர் பிரணவ் ஜாகத் கூறும்போது, அமலாக்கத்துறை இதுபற்றி விசாரணை நடத்தி வருவதால் கருத்து எதுவும் தெரிவிக்க முடியாது என்று தெரிவித்தார்.