மோட்டார் சைக்கிளோடு புதுமாப்பிள்ளை எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரது வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செங்குன்றாபுரத்தை சேர்ந்தவர் முருகன் மகன் செல்வகணேஷ் (வயது 21). இவருக்கும் வத்திராயிருப்பு புதுப்பட்டியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது. விரைவில் திருமணம் நடக்க இருந்தது.
இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி செங்குன்றாபுரம் அருகே விருதுநகர்-எரிச்சநத்தம் மெயின் ரோடு பகுதியில் செல்வகணேஷ் உடல் கருகி பிணமாக கிடந்தார். அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் செல்வ கணேஷ் உடலின் மீது எரிந்த நிலையில் கிடந்தது.
இந்த சம்பவம் குறித்து எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். முதல் கட்ட விசாரணையில் வத்திராயிருப்பு புதுப்பட்டியை சேர்ந்த மரம் ஏறும் தொழிலாளி ராஜேந்திரன் மகன் மாரிமுத்து (24) என்பவருக்கு இந்த கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
செல்வகணேசை அவர் கொன்றது ஏன்? என்பது தொடர்பாக மாரிமுத்துவின் திடுக்கிடும் வாக்குமூலம் வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:-
நான் வத்திராயிருப்பு புதுப்பட்டியில் வசித்து வந்தேன். எனது உறவினர் பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்று கடந்த 3 வருடங்களுக்கு முன்பு ஆசைப்பட்டு பெண் கேட்டேன். பெண்ணுக்கு இன்னும் திருமண வயது வரவில்லை. அதனால் தற்போது திருமணம் செய்து கொடுக்க முடியாது என்று அப்போது பெண் வீட்டார் கூறி விட்டனர்.
இதை தொடர்ந்து நான் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டேன். அந்த பெண்ணுடன் 2 ஆண்டு குடும்பம் நடத்தினேன். பின்னர் அந்த பெண்ணுக்கும் எனக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அந்த பெண் என்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.
பின்னர் மீண்டும் அதே உறவினர் பெண்ணை திருமணம் செய்ய விரும்பி பெண் கேட்டேன். 2-வது திருமணத்துக்கு அவர்கள் சம்மதிக்கவில்லை.
இதை தொடர்ந்து இன்னொரு பெண்ணை திருமணம் செய்தேன். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எனது 2-வது மனைவியும் என்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.
இந்த நிலையில் மீண்டு்ம் அதே உறவினர் பெண்ணை 3-வதாக திருமணம் செய்ய நினைத்தேன். அப்போதுதான் செங்குன்றாபுரத்தை சேர்ந்த செல்வகணேசுக்கும், அந்த பெண்ணுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
எனக்கு பெண் கொடுக்க மறுத்த உறவினர்கள் மீதும், செல்வ கணேஷ் மீதும் ஆத்திரம் ஏற்பட்டது. இந்த திருமணத்தை தடுக்க முடிவு செய்தேன். செல்வகணேசை யாருக்கும் தெரியாமல் கொலை செய்து விட்டால் உறவினர் பெண்ணை நான் திருமணம் செய்து கொள்ளலாம், நிச்சயம் செய்த மாப்பிள்ளை இறந்தால் அந்த பெண்ணை வேறு யாரும் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள் என்ற எண்ணத்தில் செல்வகணேசை கொல்ல திட்டமிட்டு நாள் பார்த்து காத்திருந்தேன்.
இந்த நிலையில் செல்வகணேஷ் அடிக்கடி எங்கள் ஊருக்கு வந்து சென்றார். சம்பவத்தன்று புதுப்பட்டிக்கு வந்த செல்வகணேஷ் செங்குன்றாபுரம் திரும்ப தயார் ஆனார். அப்போது நானும் அவருடன் ஊரில் இருந்து ஒரே மோட்டார் சைக்கிளில் செங்குன்றாபுரம் நோக்கி வந்தேன். வரும் வழியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வாகனத்தை நிறுத்த சொல்லி விட்டு சற்று தொலைவில் இயற்கை உபாதை கழிக்க செல்வதாக கூறி சென்றேன். திரும்பி வரும் போது கூர்மையான கல் ஒன்றை மறைத்து எடுத்து வந்தேன்.
இருவரும் மோட்டார் சைக்கிள் நிறுத்தி இருந்த இடத்தை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தபோது திடீரென அவரை கல்லால் பின்தலையில் பலமாக தாக்கினேன். இதில் அவர் நிலைகுலைந்து சரிந்து விழுந்தார். அப்போது செல்வ கணேஷ் மீது ஏறி அமர்ந்து கொண்டு அவரை கல்லால் கடுமையாக தாக்கி கொன்றேன். பின்னர் அவர் உடல் மீது மோட்டார் சைக்கிளை கொண்டு வந்து போட்டு தீ வைத்து எரித்தேன்.
பின்னர் யாருக்கும் தெரியாமல் சொந்த ஊர் சென்று விட்டேன். செல்வ கணேஷ் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து ஊரில் அனைவரும் பரபரப்பாக பேசிக்கொண்டு இருந்தனர். இந்த நிலையில் திடீரென போலீசார் என்னை விசாரணைக்கு அழைத்தனர். முதலில் எனக்கு தெரியாது என்று கூறி தப்பிக்க முயன்றேன். ஆனால் நானும், செல்வகணேசும் ஒரே வாகனத்தில் செல்லும் வீடியோ காட்சியின் மூலம் விசாரணை நடத்தி போலீசார் என்னை பிடித்துவிட்டனர்.
இவ்வாறு மாரிமுத்து வாக்கு மூலம் அளித்துள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.