அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. கடந்த 23-ந்தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் பங்கேற்றிருந்தனர். அப்போது ஓ.பன்னீர்செல்வத்துக்கு பொதுக்குழு உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷ மிட்டதால் ஓ.பன்னீர்செல்வம் பாதியிலேயே வெளியேறினார்.
இதனை தொடர்ந்து கடந்த 3 நாட்களாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கிடையே கருத்து மோதல் வலுத்து வருகிறது. அடுத்த மாதம் 11-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ள எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் திட்டமிட்டபடி பொதுக்குழு நடைபெறும் என்றும், அதில் எடப்பாடி பழனிசாமி கட்சியின் தலைமை பதவிக்கு தேர்வு செய்யப்படுவார் என்றும் தெரிவித்துள்ளனர்.
ஆனால் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களோ, 11-ந்தேதி பொதுக் குழு கூட்டம் நடைபெறாது என்று கூறி வருகிறார்கள். இதனால் பொதுக்குழு கூட்டம் நடக்குமா? நடக்காதா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. கடந்த 23-ந்தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் முடிந்ததும் டெல்லி சென்ற ஓ.பன்னீர்செல்வம் அங்கு தேர்தல் ஆணையத்தில் முறையிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.
இதைத் தொடர்ந்து சென்னை திரும்பிய ஓ.பன்னீர்செல்வம் தனது சொந்த மாவட்டமான தேனிக்கு சென்றுள்ளார். அங்கு தனது ஆதரவாளர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார். ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி வகுக்கும் வியூகத்தை முறியடிப்பது தொடர்பாக அவர் நிர்வாகிகள் மற்றும் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில் தான் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அழைப்பு விடுக்காமல் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இது தொடர்பான அறிவிப்பு நேற்று மாலை வெளியிடப்பட்டது.
வழக்கமாக அ.தி.மு.க. தலைமை கழகம் சார்பில் வெளியிடப்படும் அறிவிப்புகளில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரின் பெயர்களும் இடம்பெற்றிருக்கும். ஆனால் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்துக்கான அறிவிப்பை தலைமை நிலைய செயலாளர் வெளியிட்டிருந்தார். இதன்படி இன்று காலை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சுமார் 70 பேர் வரை கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் அ.தி.மு.க.வில் நிலவும் தற்போதைய பிரச்சினை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. ஒற்றை தலைமைக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் பல்வேறு கருத்துக்களை கூறி வரும் நிலையில் அதனை எதிர் கொள்வது குறித்து கட்சி நிர்வாகிகள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர்.
கடந்த 23-ந்தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்துக்கு பின்னர் பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலாவதியாகி விட்டதாக அறிவிப்பு வெளியிட்டார்.
இதனால் தற்போது ஓ.பன்னீர்செல்வம் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் என்றும் அவர் பொருளாளராக மட்டுமே உள்ளார் என்றும் கூறி இருந்தார். இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வத்திடமிருந்து பொருளாளர் பதவியையும் பறிக்க எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இதுபற்றியும் ஆலோசிக்கப்பட்டு உள்ளது. 11-ந்தேதி நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்தை திட்டமிட்டபடி நடத்துவது குறித்தும் இன்றைய கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.
கட்சியின் நிர்வாக வசதிக்காக எடப்பாடி பழனிசாமியை தற்காலிகமாக தலைமை பொறுப்பில் அமர வைப்பது குறித்தும் பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு எப்படியாவது தடை போட்டு விட வேண்டும் என்பதில் ஓ.பன்னீர்செல்வம் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில் அவரது பொருளாளர் பதவியையும் பறிக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி வகுத்துள்ள புதிய வியூகம் அ.தி.மு.க.வில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக இன்று காலை அடையாறு கிரீன் வேஸ் சாலையில் உள்ள தனது வீட்டில் வைத்தும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகளான தம்பிதுரை, செங்கோட்டையன், முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் தொடர்பாக இந்த ஆலோசனையில் பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டன. அ.தி.மு.க. ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் எதிரும் புதிருமாக செயல்பட்டு வரும் நிலையில், ஓ.பன்னீர்செல்வம் இல்லாமல் எடப்பாடி பழனிசாமி, தலைமை கழக நிர்வாகிகளை அழைத்து தனியாக ஆலோசனை நடத்தி இருப்பது அக்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள மோதலை மேலும் அதிகரித்துள்ளது.
ஓ.பி.எஸ்.சுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி வகுத்துள்ள இந்த புதிய வியூகம் அ.தி.மு.க.வினர் மத்தியில் கூடுதல் பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தி உள்ளது.