தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் திரிஷா, அவ்வப்போது தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழி படங்களில் நடிப்பதையும் வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில், அவர் அடுத்ததாக 61 வயதாகும் பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தை கோபிசந்த் மலினேனி இயக்க உள்ளார்
முதலில் இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க சுருதிஹாசனிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்களாம். அவர் பல்வேறு படங்களில் பிசியாக இருந்ததால் நடிக்க மறுத்துவிட்டாராம். இதையடுத்து தான் திரிஷாவை ஒப்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது. நடிகை திரிஷா ஏற்கனவே கடந்த 2015-ம் ஆண்டு வெளியான ‘லயன்’ என்கிற தெலுங்கு படத்தில் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை திரிஷா கடைசியாக தெலுங்கில் 2016-ம் ஆண்டு வெளியான நாயகி என்கிற படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து தெலுங்கு படங்களில் நடிக்காமல் இருந்து வந்த அவர், பாலகிருஷ்ணா படம் மூலம் 5 ஆண்டுகளுக்கு பின் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார்.