Tamilசினிமா

”மு.க.ஸ்டாலின் வாழ்க” – வைரலாகும் இளையராஜா வெளியிட்ட வீடியோ

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா மூன்று தலைமுறையுடன் இணைந்து இசையமைத்துள்ளார். இதுவரை ஆயிரத்திற்கு மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த இளையராஜா தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களுகளுக்கு இசையமைத்துள்ளார்.

இதையடுத்து பாரதியாரின் நினைவு நாளையொட்டி, இளையராஜா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”எல்லா வருடங்களும் எனக்கு இந்த நாளில் பாரதியாரின் நினைவு வரும். அது என்னை வருத்தும். என்னை பாரதியாரோடு ஒப்பிட்டு பார்த்து, ‘நிலச்சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ? என்று அவன் தன்னை தானே நொந்துகொண்டானில்லையா? ‘நல்லதோர் வீணை செய்தே – அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?’ தன்னை நல்லதோரு வீணையாகவும் அவனை உருவாக்கிய அம்மையே சக்தியே என்னை நலங்கெட புழுதியில் ஏறிந்துவிடுவாயோ என அவனின் நொந்தல் என்னை வருத்தும்.

அவருக்கு ஆறுதல் சொல்லும் வகையில் என் பட பாடலில் நான் பதில் சொல்லியிருக்கிறேன். ‘உன் குத்தமா என் குத்தமா’ பாடலில் வீதியில் இசைத்தாலும் வீணைக்கு இசையுண்டு என்று பாரதிக்கு நான் ஆறுதல் சொல்லியிருக்கிறேன். பாரதி கலங்குவதை என்னால் தாங்க முடியவில்லை.

இன்று நதிகள் இணைப்பு திட்டத்தைப் பற்றி நாமெல்லாம் பேசிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அவன் சிறுவயதில் நதிகள் இணைப்பு திட்டத்தை அப்போதே கற்பனை செய்திருக்கிறான். அவனை நினைத்து நாம் மரியாதையும், வணக்கமும், அஞ்சலியும் செலுத்துவது மாபெரும் ஒப்பற்ற விஷயம்.

பாரதியாரின் நினைவு நாளை நினைவில் கொண்டு தமிழக அரசு இந்த நாளை அவரின் பெயரால் அழைப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. தமிழக அரசு வாழ்க.. மு.க.ஸ்டாலின் வாழ்க..” என்று தெரிவித்துள்ளார்.