மு.க.ஸ்டாலின் மீதான அவதூறு வழக்குக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஈடுபட்டபோது, முதல்- அமைச்சருக்கு எதிராக சில கருத்துகளை அவர் தெரிவித்தார்.
இதையடுத்து, திண்டுக்கல் மாவட்ட செசன்சு கோர்ட்டில், மு.க.ஸ்டாலினுக்கு எதிராக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த திண்டுக்கல் கோர்ட்டு நேரில் ஆஜராகும்படி மு.க. ஸ்டாலினுக்கு சம்மன் அனுப்பியது.
அதேபோல, கரூரில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் காவிரி விவகாரம் தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் (அ.ம.மு.க.) சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை விமர்சனம் செய்தார்.
இதையடுத்து, அவர் மீது கரூர் மாவட்ட செசன்சு கோர்ட்டில் முதல்-அமைச்சர் சார்பில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் நேரில் ஆஜராகும்படி டி.டி.வி.தினகரனுக்கு, கரூர் கோர்ட்டு சம்மன் அனுப்பியுள்ளது.
இதையடுத்து இருவரும் தங்களுக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும், அந்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என்றும் ஐகோர்ட்டு மதுரை கிளையில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்குகள், மதுரை கிளையில் இருந்து சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்குகள் சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்குகளை விசாரித்த நீதிபதி, ‘மு.க.ஸ்டாலின், டி.டி.வி. தினகரன் ஆகியோருக்கு எதிராக அவதூறு வழக்குகளில் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தும், வழக்கு விசாரணைக்கு இருவரும் நேரில் ஆஜராக விலக்கு அளித்தும் உத்தரவிட்டார்.
பின்னர், இவர்களது வழக்கிற்கு 4 வாரத்துக்குள் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார்.