Tamilசெய்திகள்

மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. வரலாறு காணாத இடத்திற்கு முன்னேறி உள்ளது – தலைவர்கள் பாராட்டு

தமிழகத்தில் திராவிட இயக்கம் காலூன்றி 100 ஆண்டுகளை நிறைவு செய்துவிட்டது. இந்த நூறு ஆண்டுகளில் திராவிட ஆட்சி 50 ஆண்டுகளை கடந்து நடந்து கொண்டு இருக்கிறது.

1967-ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா கூறுகையில், ‘‘இன்னும் 50 ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டில் திராவிட ஆட்சி தொடர வேண்டும். அப்படி தொடர்ந்தால் தான் தமிழ்நாடு தனித்துவம் மிக்கதாக மேன்மை பெறும்’’ என்றார்.

அவர் சொன்னபடியே தமிழகத்தில் திராவிட கட்சிகளின் ஆட்சி 55 ஆண்டுகளை கடந்து ஆர்ப்பரிப்புடன் நடந்து கொண்டு இருக்கிறது. திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சியை நாம் சற்று உற்று பார்த்தால், பெரியார், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் தலைமையில் தனித்துவம் பெற்ற வகையில் தமிழகம் தலை நிமிர்ந்ததை பார்க்க முடியும்.

பெரியார் தமிழகத்தில் அந்த காலகட்டத்தில் நிலவி வந்த மூடநம்பிக்கைகளை வேரறுத்தார். சுயமரியாதை உணர்வை முன்நிறுத்தினார். பெண்கள் அனைத்து துறைகளிலும் மேம்பாடு பெற வேண்டும் என்பதற்கு அடித்தளம் அமைத்தார்.

அண்ணா, ‘‘வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது’’ என்று டெல்லியில் ஆவேசக் குரல் எழுப்பி தமிழகத்தில் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இனமான தமிழ் உணர்வு ஒவ்வொரு தமிழனிடமும் இருக்க வேண்டும் என்பதற்கு அடித்தளம் ஏற்படுத்தினார்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இருவரும் திராவிட இயக்கத்தின் சிறப்புகளை மேலும் மேம்படுத்தி தேசிய அளவில் எதிரொலிக்கச் செய்தனர்.

ஆனால் தமிழகத்தில் திராவிட ஆட்சி 50 ஆண்டுகள் நீடிக்க செய்யும் வகையில் அதனை கட்டிக் காத்த பெருமை கருணாநிதிக்கு மட்டுமே உண்டு. அவரது ஆட்சியில் மாநில வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்களிப்பை கொடுத்தார். ஒவ்வொரு துறையிலும் காலத்தின் தேவைக்கு ஏற்ப ஏராளமான மாற்றங்களையும், சீர்திருத்தங்களையும் செய்தார்.

தமிழர்களின் அடிப்படை வாழ்வுரிமையை மேம்படுத்தினார். இதனால் மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்தது. சமூகநீதி, செம்மொழி உரிமை உள்பட பல்வேறு வி‌ஷயங்களில் அவர் முத்திரை பதித்தார். நூற்றுக்கணக்கான புதிய திட்டங்களை தனது ஆட்சி காலத்தில் அமல்படுத்தி திராவிட மாடல் ஆட்சிக்கு வழி வகுத்தார். கருணாநிதி ஆட்சி காலத்தில் ஏற்படுத்தப்பட்ட உள் கட்டமைப்பு புரட்சிகள் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட முடியாத அளவுக்கு தமிழகத்தை உயர செய்தது.

மொத்தத்தில் பெரியார், அண்ணா, கருணாநிதி காட்டிய பாதையில் தமிழகம் தலைநிமிர்ந்தது. அதே பாதையில்தான் இன்று மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் திட்டங்களை நவீனப்படுத்தி தமிழக மக்களுக்கு புதிய, புதிய அறிவிப்புகளை தந்து கொண்டு இருக்கிறார். இதன் மூலம் பெரியார், அண்ணா, கருணாநிதியின் ஒட்டுமொத்த உருவமாகவே மு.க.ஸ்டாலின் மாறிக் கொண்டு இருக்கிறார் என்றால் அது மிகையாகாது.

இதையே நேற்று சென்னையில் நடந்த ‘உங்களில் ஒருவன்’ புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய கவிப்பேரரசு வைரமுத்துவும் தனக்கே உரிய பாணியில் உறுதிபடுத்தினார். அவர் பேசுகையில், ‘‘பெரியாரின் நீட்சி அண்ணா, அண்ணாவின் ஆட்சி கலைஞர். இந்த மூன்று பேரின் நீட்சி என்று ஸ்டாலினே சொல்வதை விட இந்த மூன்று பேரின் நீட்சியாக வேண்டும் என்று ஆசைப்படுபவர் ஸ்டாலின் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்கிற நோக்கத்தில்தான் அவர் பயணம் மேற்கொள்கிறார்’’ என்று பேசினார்.

எந்த ஒரு இயக்கமும் எவ்வளவு காலம் வாழ வேண்டும் என்பதை அதன் தேவைதான் சொல்லும் என்று அரசியல் நிபுணர்கள் சொல்வது உண்டு. தமிழகத்தில் காங்கிரசும், கம்யூனிஸ்டுகளும் ஒரு காலத்தில் உச்சத்தில் இருந்தன. அவர்களுக்கான தேவை முடிந்ததும் அவர்களின் காலமும் முடிந்து போனது.

அந்த வகையில் தமிழகத்தில் திராவிட இயக்கத்தின் தேவை இன்னும் பல ஆண்டுகளுக்கு வேண்டும் என்பதே நிதர்சனமான உண்மை ஆகும். இதை உறுதிபடுத்தும் வகையில்தான் தமிழக மக்கள் மு.க.ஸ்டாலினின் கரத்தை வலுப்படுத்தி உள்ளனர்.

அவர் மீது 100 சதவீதம் நம்பிக்கை வைத்து தமிழக மக்கள் ஆட்சி பொறுப்பை ஒப்படைத்து இருக்கிறார்கள். திராவிட இயக்கத் தலைவர்கள் வரிசையில் மு.க.ஸ்டாலின் எந்த அளவுக்கு தனது பங்களிப்பை ஏற்படுத்துவார் என்று நிறைய பேரிடம் பல்வேறு கோணங்களிலும், பல்வேறு கருத்துக்கள் நிலவியது.

ஆனால் மு.க.ஸ்டாலின் தனித்தன்மையுடன் தமிழகத்தின் பாரம்பரிய சிறப்புகளை மேம்படுத்துவதை பார்த்து இன்று அனைவரும் வியந்து போய் நிற்கிறார்கள். அதனால்தான் தமிழக மக்கள் அவர் மீது நம்பிக்கை வைத்து பாராளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என்று 3 தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ‘ஹாட்ரிக்’ வெற்றியை அள்ளிக் கொடுத்தனர்.

பொதுவாகவே திராவிட இயக்க ஆட்சியில் செய்யப்பட்ட பொருளாதார மற்றும் சமூக நலத்திட்டங்கள்தான் தமிழகத்தை மிக வளர்ந்த மாநிலமாக மாற்றியது என்பார்கள். குறிப்பாக மாநில சுயாட்சி, சமூகநீதி மற்றும் இந்தி திணிப்பை எதிர்ப்பது தி.மு.க.வின் உயிர்நாடிக் கொள்கை ஆகும்.

அந்த கொள்கைகளில் கருணாநிதி உறுதியாக நின்றார். அவர் வழியில் ஆட்சி நடத்தும் மு.க.ஸ்டாலினும் இன்று உறுதியாக நிற்கிறார். மத்திய அரசு பல வகைகளில் இந்தி தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டுள்ள போதிலும் தேசிய அளவில் முதல் எதிர்ப்புக் குரலாக வெளிப்படுவது முதல்- அமைச்சரின் மு.க.ஸ்டாலினின் குரல்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால்தான் இன்று தமிழகம் தாண்டி தேசிய அரசியலிலும் மு.க.ஸ்டாலின் கவனம் பெற்றுள்ளார்.

திராவிட வழித்திட்டங்கள், இந்தியாவுக்கே முன்மாதிரியாக இருக்கின்றன என்று மற்ற மாநில முதல்- மந்திரிகள் பொறாமையோடு சொல்வார்கள். அந்த அளவுக்கு திராவிட வழித்திட்டங்கள் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதாக அமைந்தன.

அந்த வழியில் வந்த முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது திராவிட வழித் திட்டங்களில் ‘திராவிட மாடல் ஆட்சி’ என்று புதிய கோ‌ஷத்தை எழுப்பி உள்ளார். திராவிட வழித்திட்டங்களில் புதுமைகள் பல புகுத்தி ஆச்சரியப்படுத்தி உள்ளார். குறிப்பாக தமிழ்நாட்டை தொழில்சார் மாநிலமாக மாற்றுவதிலும், தமிழ் உணர்வை மேம்படுத்துவதிலும், தமிழ் பண்பாட்டு கலாச்சார சிறப்பை உயர்த்தி பிடிப்பதிலும், தமிழர்களின் பழமைக்கு முக்கியத்துவம் கொடுப்பதிலும் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தன்மையுடன் மிளிர்ந்து கொண்டு இருக்கிறார்.

பனைமரத்துக்கு எந்த அளவுக்கு அவர் முக்கியத்துவம் கொடுத்தாரோ, அதே அளவுக்கு புதுமை திட்டங்களான ‘வீடு தேடி வரும் மருத்துவம்’ போன்ற திட்டங்களுக்கும் அவர் முக்கியத்துவம் கொடுக்கிறார்.

தற்போதைய நவீன காலத்துக்கு ஏற்ப அவரது கொள்கை முடிவுகள் உள்ளன. அதுமட்டுமின்றி தமிழகத்தின் பாரம்பரிய சிறப்பை விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதில் அவர் காட்டும் உறுதி உண்மையிலேயே தமிழர்களை பெருமை கொள்ளச் செய்கிறது.

இந்தியாவின் வரலாறு தமிழகத்தில் இருந்து எழுதப்பட வேண்டும் என்று அறிவித்துள்ள அவர், அதற்காக அகழ்வாராய்ச்சிகளில் காட்டும் தீவிரம் மத்திய அரசையே மலைக்கச் செய்துள்ளது. தமிழகத்தில் எல்லோருக்கும் சமமாக எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற திராவிட மாடல் ஆட்சியின் உந்துதலை அவர் ஒவ்வொரு தருணத்திலும் வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறார்.

தமிழக வாக்காளர்கள் சும்மா ஓட்டு போட்டுவிட மாட்டார்கள். பணம் வாங்கினாலும், பரிசுப் பொருட்கள் வாங்கினாலும் சரி திராவிட இயக்க தலைவர்களை கண்காணித்து மற்றும் கணித்துதான் எப்போதும் வாக்குகளை செலுத்துவார்கள்.

அவர்களது கணிப்பின்படி தமிழகத்தில் கல்வி, மகளிர் சுய உதவிக்குழு, தாழ்த்தப்பட்டவர்களின் மேம்பாடு, உள்கட்டமைப்பு வளர்ச்சி, பாரம்பரிய சிறப்புகளை சொல்லும் தன்மை, நவீனத்தை புகுத்துவது போன்றவைகளில் முதன்மையானவராக திகழும் மு.க.ஸ்டாலினை கணித்து வாக்கு அளித்துள்ளனர்.

அதனால்தான் தமிழக மக்கள் கொடுத்த ஹாட்ரிக் வெற்றியை தமிழ்நாட்டு மக்கள் அளித்த பிறந்தநாள் பரிசாக மு.க.ஸ்டாலின் கருதி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மொத்தத்தில் ஒவ்வொரு வி‌ஷயத்திலும் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுள்ள தெளிவான சிந்தனைகளுக்கும், அதன் தொடர்ச்சியான திராவிட வழி திட்டங்களுக்கும் வெற்றிகள் அலை அலையாக கிடைக்கின்றன.

அதனால்தான் தி.மு.க. வரலாறு காணாத வலிமையான இயக்கமாகவும் மாறி உள்ளது. அண்ணா, கருணாநிதி தலைமையில் இருந்ததை விட இன்று தி.மு.க. தமிழகத்தில் பல மடங்கு வலிமை பெற்று இருப்பதை யாராலும் மறுக்க முடியாது.

இன்னும் சொல்லப் போனால் 55 ஆண்டுகள் திராவிட இயக்க ஆட்சியில் இதுவரை இல்லாத அளவுக்கு ஆட்சி, பதவி, அதிகாரங்களில் தி.மு.க. வரலாறு காணாத இடத்திற்கு முன்னேறி உள்ளது.

பாராளுமன்றத்தில் தி.மு.க. 34 எம்.பி.க்களுடன் 3-வது பெரிய கட்சியாக அமர்ந்துள்ளது. தமிழகத்தில் 133 எம்.எல்.ஏ.க்களுடன் ஆளுங்கட்சியாக உள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் 153 வார்டுகளில், 139-ஐ கைப்பற்றி சாதனை படைத்தது. அதுபோல ஊராட்சி ஒன்றிய வார்டுகளில் 1,420-ல் 982 வார்டுகளை கைப்பற்றியது.

சமீபத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 1,373 மாநகராட்சி வார்டுகளில் 952 வார்டுகளில் தி.மு.க.வினர் வெற்றி பெற்றனர். 3,842 நகராட்சி வார்டுகளில் 2,360 இடங்களில் தி.மு.க. வெற்றிக்கொடி நாட்டியது.

7,604 பேரூராட்சி வார்டுகளில் 4,389 வார்டுகளில் தி.மு.க.வினர் பதவிக்கு வந்துள்ளனர்.

மொத்தத்தில் சமீபத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 7,701 இடங்களில் தி.மு.க.வினர் உறுப்பினர்களாக உள்ளனர். எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், ஊரக உள்ளாட்சி பதவிகள் போன்றவற்றை கணக்கில் கொண்டால் சுமார் 10 ஆயிரம் பதவிகளில் தி.மு.க. வினர் அமர்ந்து இருக்கிறார்கள்.

அ.தி.மு.க.வின் கோட்டையாக பார்க்கப்பட்ட கொங்கு மண்டலம் இன்று தி.மு.க. கோட்டையாக மாறி உள்ளது. அதுமட்டுமின்றி 50 ஆண்டுகளுக்கு பிறகு எடப்பாடி நகராட்சி, பரமக்குடி நகராட்சி, 40 ஆண்டுகளுக்கு பிறகு கோபிச்செட்டிபாளையம் நகராட்சி, 27 ஆண்டுகளுக்கு பிறகு கோவில்பட்டி நகராட்சி போன்றவற்றை கைப்பற்றியும் தி.மு.க. சாதனை படைத்துள்ளது.

இந்த சாதனைகளுக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது மு.க.ஸ்டாலின் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர் வகுத்த வியூகம் இன்று தி.மு.க.வை வலிமையான இயக்கமாக மாற்றி உள்ளது. தமிழ்நாட்டில் எல்லா அமைப்புகளிலும் தி.மு.க. வினர் அதிகாரத்தில் உள்ளனர் என்ற நிலையை மு.க.ஸ்டாலின் ஏற்படுத்தி இருக்கிறார். கூட்டுறவு சங்கங்கள் பதிவாளரின் கீழ் 10,200 சங்கங்கள் உள்ளன. இது தவிர வீட்டு வசதி வாரியம், கைத்தறி, பால், தொழில்துறை என 14 துறைகளின் கீழும் பல்வேறு கூட்டுறவு சங்கங்களின் கீழும் பதவிகள் உள்ளன.

இந்த சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டால் அதிலும் தி.மு.க.வினர்தான் வெற்றி பெறுவார்கள். இதன் மூலம் தமிழகத்தின் குக்கிராமங்களில் இருந்து தலைநகரம் வரை தி.மு.க. ஆட்சி அதிகாரம் செலுத்தி சேவை செய்வதை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிபடுத்தி இருக்கிறார்.

திராவிட வழித்திட்டங்களில் மட்டுமின்றி திராவிட முன்னேற்றக்கழகத்தின் பணிகளிலும் மு.க.ஸ்டாலினின் நடவடிக்கைகள் தேசிய அளவில் உற்றுப்பார்க்கப்படுகிறது.

மிகக்குறுகிய நாட்களில் ‘இந்தியாவின் நம்பர் ஒன் முதல்-அமைச்சர்’ என்ற சிறப்பையும் அவர் பெற்றுள்ளார். தமிழ் நாட்டிற்கும், தமிழர்களுக்கும் அவர் செய்யும் சேவைகள் பல தலைமுறைக்கும் பேசப்படும் என்பது நிச்சயம்.