மு.கருணாநிதியின் 98வது பிறந்தநாள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 98-வது பிறந்த தினம் இன்று எளிமையாக கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அவருடன் தி.மு.க. பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் பொன்முடி, கே.என்.நேரு, எ.வ.வேலு, ஐ.பெரியசாமி, தா.மோ. அன்பரசன், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வெள்ளக்கோவில் சாமிநாதன், மா.சுப்பிரமணியன், சேகர் பாபு, க.ராமச்சந்திரன், உதய நிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் சென்று மரியாதை செலுத்தினர். கருணாநிதி நினைவிட வளாகத்தில் மு.க.ஸ்டாலின் மரக்கன்று நட்டார்.
முன்னதாக அண்ணாவின் நினைவிடத்திலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதை தொடர்ந்து கோடம்பாக்கத் தில் உள்ள முரசொலி அலுவலகம் சென்று அங்குள்ள கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்தார்.
அதன் பிறகு அண்ணா அறிவாலயம் சென்றார். அறிவாலய வளாகத்தில் உள்ள கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி வணங்கினார். அப்போது அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மேற்கு மாவட்ட செயலாளர் நே.சிற்றரசு, தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா மற்றும் முக்கிய பிரமுகர்கள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சி முடிந்ததும் கருணாநிதி வசித்த கோபாலபுரம் வீட்டுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார். அங்குள்ள கருணாநிதியின் படத்துக்கு மலர் தூவி வணங்கினார். சி.ஐ.டி. காலனியில் உள்ள வீட்டுக்கும் சென்று கருணாநிதியின் படத்துக்கு மலர் தூவி வணங்கினார்.
முன்னதாக மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர வாகன சைக்கிள், ஸ்மார்ட் போன் ஆகியவற்றை தலா 5 பேருக்கு வழங்கினார்.
அதன் பிறகு கோட்டைக்கு சென்று பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.