தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் காவிரி டெல்டா மாவட்டங்கள் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை நீடித்து வருகிறது. இதையொட்டி காவிரி டெல்டா மற்றும் மேட்டூர் அணை கால்வாய் பாசன பகுதிகளில் விவசாயத்துக்கு தண்ணீர் தேவை குறைந்துள்ளது.
எனவே மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு கடந்த சில வாரங்களாக படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 1,000 கனஅடியாக குறைக்கப்பட்டது. இந்த நிலையில் மழை மேலும் தீவிரம் அடைந்து வருவதால் காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு நேற்று வினாடிக்கு 500 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 350 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடிக்கு மேல் அதிகரித்து உள்ளது.
ண்ணீரின் அளவை விட அணைக்கு நீர்வரத்து பலமடங்கு அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.
நேற்று முன்தினம் 117.80 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று காலையில் 118.60 அடியாக உயர்ந்தது. இரவு 8 மணிக்கு அணையின் நீர்மட்டம் 119.33 அடியை எட்டியது.
அணையின் மொத்த கொள்ளளவு 93.45 டி.எம்.சி. ஆகும். (ஒரு டி.எம்.சி. என்பது நூறு கோடி கனஅடி). நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர் இருப்பு 91.25 டி.எம்.சி. ஆக இருந்தது.
அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தொடர்ந்து நீடிப்பதால் அணைக்கு வரும் நீர்வரத்தும் அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் இன்று முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இந்த ஆண்டில் 2 மாதங்களில் 3வது முறையாக மேட்டூர் அணை நிரம்பி உள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 16,239 கனஅடியில் இருந்து 25,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 22,500 கனஅடி உபரி நீர் திறந்து விடப்படுகிறது.
காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், காவிரி கரையோரம் உள்ள சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கடலூர், நாகப்பட்டினம் ஆகிய 12 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோரம் வசிக்கும் மக்கள் கவனமுடன் இருக்கும்படி பொதுப்பணித்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.