கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் தமிழகத்தின் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. மேலும் குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. தென் மாவட்டங்களில் வறட்சியை போக்குவதற்காக பென்னிகுவிக் பல்வேறு இன்னல்களுக்கு இடையே முல்லைப்பெரியாறு அணையை கட்டி முடித்தார். இதன் மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது.
ஆனால் கேரளாவில் சிலர் முல்லைப்பெரியாறு அணை பலம் இழந்து விட்டதாகவும், அதனை இடித்து விட்டு புதிய அணை கட்ட வேண்டும் எனவும் வதந்தி கிளப்புகின்றனர். இதனை வலியுறுத்தி கேரள அரசியல் கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் இடுக்கி மாவட்டம் தொடுபுழா அருகே வெள்ளியமட்டம் ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் பிரச்சினையை மேலும் பெரிதுபடுத்தியுள்ளது. இதற்கு தமிழக விவசாயிகள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இது குறித்து பெரியாறு, வைகை பாசன விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர்பாலசிங்கம் கூறியதாவது:-
முல்லைப்பெரியாறு அணையை இடித்து விட்டு புது அணை கட்ட வேண்டும் என இடுக்கி வெள்ளியமட்டம் ஊராட்சி தலைவர் இந்துபிஜூ முன்னிலையில் 23ந் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அங்குள்ள 15 வார்டுகளில் 8 சுயேட்சைகளும், 2 மார்க்சிஸ்ட்டு கட்சியும், பா.ஜ.க. மற்றும் கேரள காங்கிரஸ் (மாணிபிரிவு) தலா ஒரு வார்டுகளையும் கைப்பற்றி உள்ளது.
3 மாதங்களுக்கு முன்பு சேவ் கேரளா பிரிகேட் அமைப்பின் தலைவர் வக்கீல் ரசூல்ஜோய் இடுக்கி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் இத்தீர்மானத்தை நிறைவேற்ற கடிதம் அனுப்பி இருந்தார். அவரது வேண்டுகோளை ஏற்று ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு தமிழக விவசாயிகள் சார்பில் கண்டனத்தை பதிவு செய்துள்ளோம்.
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி மாவட்ட அனைத்து ஊராட்சிகளிலும் தேவிகுளம், பீர்மேடு, உடும்பன்சோலை தாலு காக்களை தமிழகத்துடன் இணைக்க வேண்டி தீர்மானம் நிறைவேற்ற கடிதம் அனுப்ப உள்ளோம். என்றார்.