Tamilசெய்திகள்

முல்லைப் பெரியாறு, வைகை அணைகளை திறந்து விட கோரி 15 ஆம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முல்லைப் பெரியாறு மற்றும் வைகை அணைகளில் இருந்து, மதுரை மாவட்டம், மேலூர் தொகுதியில் உள்ள விவசாய விளைநிலங்களுக்கு தண்ணீர் திறந்துவிடாத தி.மு.க. அரசைக் கண்டித்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு உடனடியாகத் தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தியும், அ.தி.மு.க. மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்தின் சார்பில், வருகிற 15-ந்தேதி காலை 10 மணி அளவில், மேலூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக அமைப்புச் செயலாளரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளருமான ஏ.ஏ. ராஜன் செல்லப்பாவின் தலைமையிலும், மாவட்ட இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறைச் செயலாளர் ஞ. பெரிய புள்ளான் (எ) செல்வத்தின் முன்னிலையிலும் நடைபெறும்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களும், மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.