Tamilசெய்திகள்

முறையான அனுமதியின்று உள்ளே வரக்கூடாது – ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்ப டெல்லி பல்கலைக்கழகம் முடிவு

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கடந்த 5-ந் தேதி, டெல்லி பல்கலைக்கழக முதுகலை மாணவர் விடுதிக்கு திடீரென சென்றார். மாணவர்களுடன் உரையாடினார். அவர்களுடன் மதிய உணவு சாப்பிட்டார்.

இந்நிலையில், அவரது திடீர் பயணத்துக்கு டெல்லி பல்கலைக்கழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதன் பதிவாளர் விகாஸ் குப்தா கூறியதாவது:-

ராகுல்காந்தி, அனுமதியற்ற பயணமாக வந்துள்ளார். அவர் உள்ளே நுழைந்தபோது, மாணவர்கள் மதிய உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் வருவதை எங்களால் சகித்துக்கொள்ள முடியாது. இனிமேல் அனுமதியற்ற பயணத்தை மேற்கொள்ள வேண்டாம் என்று ராகுல்காந்திக்கு ஓரிரு நாளில் நோட்டீஸ் அனுப்ப உள்ளோம்.

இத்தகைய பயணம், மாணவர்களின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும். மாணவர்களுடன் உரையாட உரிய நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

யாருடைய நிர்ப்பந்தத்தாலோ டெல்லி பல்கலைக்கழக நிர்வாகம், ராகுல்காந்தியை கண்டிப்பதாக காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவு குற்றம் சாட்டியுள்ளது. அதை மறுத்துள்ள பல்கலைக்கழக பதிவாளர், ”ஒரு நிர்ப்பந்தமும் இல்லை. இது ஒழுக்கம் சம்பந்தப்பட்ட விஷயம்” என்று கூறியுள்ளார்.