Tamilசினிமா

முரளிதரன் வாழ்க்கை படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகல்!

இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன்கள் சச்சின் தெண்டுல்கர், டோனி ஆகியோரின் வாழ்க்கை திரைப்படங்களாக வந்தன. கபில்தேவ் உலக கோப்பையை வென்றதை வைத்து ‘83’ என்ற பெயரில் படம் தயாராகிறது. இதுபோல் 800 விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கை கிரிக்கெட் பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் வாழ்க்கையையும் படமாக எடுக்கின்றனர்.

முரளிதரன் வேடத்தில் நடிக்க விஜய் சேதுபதியை ஒப்பந்தம் செய்துள்ளனர். படத்துக்கு ‘800’ என்ற தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது. ஸ்ரீபதி ரங்கசாமி டைரக்டு செய்கிறார். விஜய் சேதுபதி கூறும்போது, “உலக அளவில் கிரிக்கெட் விளையாட்டில் முத்திரை பதித்த முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிப்பது பெருமையாக உள்ளது” என்றார்.

ஆனால் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியது. விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளியிட்ட அறிக்கையில் “முரளிதரன் கண்டியில் பிறந்த தமிழராக இருந்தாலும் சிங்களராகவே வாழ்ந்து வருகிறார். விடுதலைப்புலிகள் போராடியபோது சிங்களர்கள் பக்கம் நின்று துரோகம் செய்தார். அவரது கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதை ஈழத்தமிழர்கள் ஏற்கமாட்டார்கள்” என்று கண்டித்தது.

இதுபோல் சமூக வலைத்தளத்திலும் விஜய் சேதுபதி நடிப்பதை கடுமையாக எதிர்த்தனர். வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களும் முரளிதரன் வாழ்க்கை படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என்று வலைத்தளத்தில் கருத்துகள் பதிவிட்டனர். இதனால் அந்த படத்தில் இருந்து விலகுவது குறித்து விஜய் சேதுபதி ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *