X

முரசொலி நிலத்தை ஒப்படைத்தால் திமுக-வுக்கு ரூ.5 கோடி! – பொன்.ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

பெரம்பலூரில் நடந்த தமிழ்நாடு பட்டதாரிகள் கூட்டமைப்பு கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க. அறக்கட்டளைக்கு சொந்தமான முரசொலி அலுவலகம் அமைந்திருக்கும் இடம் பஞ்சமி நிலம் எனக் கூறப்படுகிறது. அதற்கான மூலப்பத்திரம் உள்ளது என தி.மு.க. வெளியிட்டுள்ளது. முரசொலி அலுவலக இடம் பஞ்சமி நிலமா, இல்லையா? என்பது குறித்து தமிழக அரசு தயவு செய்து தனது பதிலை தெரிவிக்க வேண்டும்.

தலித் சமுதாயத்தை சேர்ந்த மக்களின் உரிமைகள் காக்கப்படவேண்டும். அந்த நிலம் பஞ்சமி நிலமாக இருந்தால் அதனை உடனே அரசிடம் ஒப்படைக்க வேண்டும். அந்த நிலம் ரூ.5 கோடி மதிப்பு எனவும், அந்த நிலத்தை தமிழக அரசிடம் திருப்பி கொடுக்கும் பட்சத்தில் தி.மு.க.விற்கு ரூ.5 கோடி இழப்பு என்றால் அந்த பணத்தை நான் அல்லது பா.ஜ.க. தர தயார். அந்த பஞ்சமி நிலத்திலிருந்து தி.மு.க. அறக்கட்டளை அகற்றப்பட வேண்டும்.v

வரும் உள்ளாட்சி தேர்தலில் மாபெரும் வெற்றியை அடைய வேண்டும் என்பதற்காக கட்சியை பலப்படுத்தி வருகிறோம். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோரிடமிருந்து விருப்ப மனு பெறும் நிகழ்வு நடந்து வருகிறது. தேர்தல் எப்போது வந்தாலும் அதை எதிர்கொள்ள பா.ஜ.க. தயார் நிலையில் உள்ளது. வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தல் பா.ஜ.க.வுக்கு வசந்த கால தேர்தலாக இருக்கும். அதிக இடங்களில் வெற்றி பெறும்.

உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. மாபெரும் வெற்றியை பெற வேண்டும் எனும் நோக்கில் தேர்தல் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை இன்னும் கூட்டணி முடிவு செய்யப்படவில்லை. கூட்டணி குறித்து அகில இந்திய தலைமைதான் முடிவு செய்யும். அதிக இடங்களில் போட்டியிடுவோம். தூய்மையான ஊழலற்ற நிர்வாகத்தை வழங்க நடவடிக்கை எடுப்போம்.

உள்ளாட்சி மன்ற தேர்தல் நடைபெறவில்லையெனில் கிராமப்புற மக்களின் தேவைகளை நிறைவேற்றவோ, அவர்களது பிரச்சினைகளை தீர்க்கவோ முடியாத நாதியற்ற நிலை ஏற்படும்.

உள்ளாட்சி தேர்தலில் கட்சியின் செல்வாக்கு செல்லுபடியாகாது. தனி நபரின் செல்வாக்குதான் உள்ளாட்சி தேர்தல் முடிவில் முக்கிய பங்கு வகிக்கும். கோடிக்கணக்கான நிதியை மத்திய அரசு தர தயாராக உள்ளது. உள்ளாட்சி தேர்தல் நடந்தால்தான் நிதி பெற்று மக்களின் தேவைகளை நிறைவேற்றமுடியும். தூய்மையான, நேர்மையான மக்கள் பிரதிநிதிகள் வரவேண்டும் எனும் ஏக்கம் மக்களிடம் உள்ளது. அதை கொடுக்கும் சக்தி படைத்த ஒரே கட்சி பா.ஜ.க.தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags: south news