மும்பை வெள்ளத்தில் சிக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்! – 700 பயணிகள் பறிதவிப்பு
மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அந்தேரி, தானே உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி உள்ளது.
கனமழையால் சாலைகள் மற்றும் தண்டவாளங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் போக்குவரத்து பாதிப்பு அடைந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மும்பையில் 150 முதல் 180 மில்லி மீட்டர் வரை மழை பதிவாகியுள்ளது. இதற்கிடையே, இன்று மும்பையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பதல்பூரில் மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் ரெயில் வெள்ளத்தில் சிக்கியது. இதில் இருந்த சுமார் 700க்கும் மேற்பட்ட பயணிகள் தவித்து வருகின்றனர்.
ரெயில் பயணிகளை மீட்க தேசிய பேரிடர் மீட்பு மற்றும் ஆர்.பி.எப்., படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மேலும், கடற்படை ஹெலிகாப்டர்களும் அங்கு விரைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.