மும்பை விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல் – சென்னை வாலிபர் கைது
மும்பை விமான நிலையத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 40 கிலோ கேட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக டெல்லி சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் டெல்லியில் இருந்து சுங்கத்துறை உதவி கமிஷனர் மல்லிகார்ஜுனா தலைமையிலான அதிகாரிகள் நடத்திய விசாரணையில் மும்பை விமான நிலையத்தில் போதைபொருள் கடத்திய வழக்கில் சென்னையை சேர்ந்த வாலிபர்கள் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
இதனைத்தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் நேற்று சென்னை வந்தனர். சென்னையில் போதைப் பொருள் கடத்தல் கும்பலை பிடிக்க வலை விரித்தனர்.
பெரம்பூரை சேர்ந்த ஜெய்னுதீன் என்ற வாலிபருக்கு போதைபொருள் கடத்தலில் தொடர்பு இருப்பது அம்பலமானது. சென்னை பாரிமுனை பகுதியில் பதுங்கி இருந்த அவரை சுங்கத்துறை அதிகாரிகள் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். பாரிமுனையில் உள்ள வங்கியிலும் சோதனை நடத்தப்பட்டது. லாக்கரில் ஜெய்னு தீன் வைத்திருந்த ஆவணங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பின்னர் விசாரணைக்காக அவர் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். போதைபொருள் கடத்தலில் சென்னை சாந்தோம் பகுதியை சேர்ந்த ஜாபர், சலீம் ஆகிய இருவருக்கும் தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது. 2 பேரும் தப்பி ஓடி விட்டனர். அவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.