Tamilவிளையாட்டு

மும்பை இந்தியன்ஸ் அணியில் தென் ஆப்பிரிக்காவின் இளம் வேகப்பந்து வீச்சாளர் இணைந்தார்

ஐபிஎல் 2024 சீசன் டி20 கிரிக்கெட் திருவிழா நாளை தொடங்க இருக்கிறது. களம் இறங்க 10 அணிகளும் தயாராகியுள்ள நிலையில், ரசிகர்களும் போட்டிகளை காண ஆர்வமாக உள்ளனர். மும்பை இந்தியன்ஸ் அணி புதிய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தலைமையில் கோப்பையை வெல்ல களம் இறங்க இருக்கிறது.

மும்பை இந்தியன்ஸ் அணியில் இலங்கையை சேர்ந்த மதுஷங்கா இடம் பெற்றிருந்தார். இவர் காயம் காரணமாக 2024 சீசனில் இருந்து விலகியுள்ளார். இதனால் தென்ஆப்பிரிக்காவின் 17 வயதான மபாவா என்ற இளம் வீரரை மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் பட்டியலில் இணைத்துள்ளது.

இடது கை வேகப்பந்து வீச்சாளரான மபாகா 19 வயதிற்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் அபாரமாக பந்து வீசினார். 21 விக்கெட்டுக்கள் வீழ்த்தி தொடர் நாயகன் விருதை வென்றார். மேலும், 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் 21 விக்கெட்டுகள் வீழ்த்திய வேகப்பந்து என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

இவர் தென்ஆப்பிரிக்கா ஏ, தென்ஆப்பிரிக்கா எமெர்ஜிங் அணிகளுக்காக விளையாடியுள்ளார். இவர் வீரர்கள் அறையை மலிங்கா, பும்ரா ஆகிய ஜாம்பவான்கள் உடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறார். 140 கி.மீட்டர் வேகத்தில் பந்து வீசும் திறன் கொண்ட மபாகா, பவுன்சர் மற்றும் யார்க்கர் பந்துகள் வீசுவதிலும் சிறந்து விளங்குகிறார்.