Tamilவிளையாட்டு

மும்பை இந்தியன்ஸ் அணியின் தோல்வி குறித்து கருத்து கூறிய ரோகித் சர்மா

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் மும்பையில் நேற்று முன்தினம் இரவு நடந்த 3-வது லீக் ஆட்டத்தில் 3 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியிடம் வீழ்ந்தது.

முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது. 21 வயதான விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் 27 பந்துகளில் 7 பவுண்டரி, 7 சிக்சருடன் 78 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். பின்னர் கடினமான இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி 19.2 ஓவர்களில் 176 ரன்னில் அடங்கியதுடன், அதிர்ச்சி தோல்வியையும் சந்தித்தது.

ரிஷப் பந்த் அடித்த கடைசி பந்தை தடுக்க முயன்ற மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இடது தோள்பட்டையில் காயம் அடைந்ததால் பேட்டிங் செய்யவில்லை. அவர் காயத்தில் இருந்து வேகமாக மீண்டு வருவதாக மும்பை அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவருக்கு எடுக்கப்பட்ட ஸ்கேன் பரிசோதனை அறிக்கையில் பாதிப்பு எதுவும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. எனவே அவர் அடுத்த ஆட்டத்தில் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி அணி வீரர் ரிஷப் பந்த் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

வெற்றிக்கு பிறகு டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் அளித்த பேட்டியில், ‘உண்மையிலேயே கேப்டன் பதவியை ஏற்பதற்காக என்னை தயார்படுத்தி இருக்கிறேன். இந்திய ‘ஏ’ அணிக்கு கேப்டனாக இருந்துள்ள அனுபவம் எனக்கு உதவிகரமாக இருக்கிறது. நாங்கள் இந்த போட்டிக்காக நன்றாக தயாராகினோம். ரிஷப் பந்த் அழிவை ஏற்படுத்தக்கூடிய பேட்ஸ்மேன். கடந்த ஒரு ஆண்டில் அவர் ஆட்டத்தில் நிறைய முதிர்ச்சி கண்டுள்ளார். முதலில் சில பந்துகளை அடிக்காமல் விட்ட அவர் பின்னர் அதிரடியாக விளாசினார். அற்புதமான பேட்ஸ்மேனான அவர் எங்கள் அணிக்கு கிடைத்தது சிறப்பானதாகும்’ என்று தெரிவித்தார்.

தோல்வி குறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா கருத்து தெரிவிக்கையில், ‘முதல் ஆட்டம் பெரும்பாலான அணிகளுக்கு சவாலானதாகவே இருக்கும். இந்த ஆட்டத்தில் நாங்கள் நிறைய தவறுகள் செய்தோம். முதல் 10 ஓவர்கள் ஆட்டம் எங்கள் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. ரிஷப் பந்த் அதிரடியாக ஆட ஆரம்பித்த பிறகு ஆட்டத்தின் போக்கு மாறியது. எங்களது பந்து வீச்சு திட்டத்தை செயல்படுத்த முடியாமல் போனது. இந்த தவறில் இருந்து விரைவாக பாடம் கற்றுக்கொண்டு அடுத்த ஆட்டத்துக்கு நாங்கள் நல்ல நம்பிக்கையுடன் திரும்ப வேண்டும். ஆடுகளம் கடைசி வரை பேட்டிங்குக்கு நன்றாக தான் இருந்தது. யுவராஜ்சிங் அருமையாக ஆடினார். எங்களது டாப்-4 பேட்ஸ்மேன்களில் யாராவது ஒருவர் 70 முதல் 80 ரன்கள் எடுத்து இருந்தால் ஆட்டத்தின் முடிவு வேறு மாதிரி இருந்து இருக்கலாம்’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *