மும்பை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள பெஸ்ட் நிர்வாகம் பஸ்களை இயக்கி வருகிறது.
மின்சார ரெயில்களுக்கு பிறகு மும்பையில் மக்கள் பெஸ்ட் பஸ்களை தான் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். எனினும் கட்டண உயர்வு, போக்குவரத்து நெரிசல் போன்ற பல்வேறு காரணங்களால் 40 லட்சமாக இருந்த பெஸ்ட் பயணிகள் எண்ணிக்கை தற்போது 25 லட்சமாக குறைந்தது. இதனால் பெஸ்ட் நிர்வாகம் நஷ்டத்தில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் பயணிகளை கவர பஸ் கட்டணத்தை குறைக்க பெஸ்ட் நிர்வாகம் முடிவு செய்தது. இதன்படி ரூ.8 ஆக இருந்த குறைந்தபட்ச கட்டணத்தை ரூ.5 ஆக குறைக்க முடிவு செய்யப்பட்டது.
இந்த கட்டண குறைப்பு திட்டத்துக்கு பெஸ்ட் கமிட்டி, மாநகராட்சி மற்றும் மும்பை பெருநகர போக்குவரத்து ஆணையம் ஒப்புதல் அளித்து இருந்தன.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மாநில அரசு பெஸ்ட் பஸ் கட்டண குறைப்புக்கு ஒப்புதல் அளித்து அறிவிக்கை (ஜி.ஆர்.) வெளியிட்டது. இதையடுத்து நேற்று பெஸ்ட் பஸ் கட்டண குறைப்பு உடனடியாக அமலுக்கு வந்தது. இதன் காரணமாக மும்பையில் இனிமேல் பொதுமக்கள் ரூ.5 கொடுத்து 5 கி.மீ. தூரத்துக்கு பெஸ்ட் பஸ்களில் பயணம் செய்யலாம். ரூ.20 இருந்தால் தானே, நவிமும்பை பகுதிகளுக்கு செல்லமுடியம். இதேபோல வெறும் 6 ரூபாய் இருந்தால் ஏ.சி. பஸ்சில் 5 கி.மீ.க்கு பயணம் செய்யலாம்.
இது குறித்து பெஸ்ட் பொதுமேலாளர் சுரேந்திரகுமார் பட்கே கூறியதாவது:-
பெஸ்ட் பஸ் கட்டணத்தை குறைத்து உள்ளோம். கட்டணம் குறைக்கப்பட்டதால் பலர் கார், மோட்டார் சைக்கிள் போன்ற தனியார் வாகனங்களை தவிர்த்து ஏ.சி. பஸ்சில் பயணம் செய்ய தொடங்குவார்கள். இதனால் போக்குவரத்து நெரிசல், காற்று மாசு குறையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பெஸ்ட் பஸ் கட்டண குறைப்பு பொதுமக்கள் இடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் கட்டண குறைப்பை வரவேற்று உள்ளனர். இது குறித்து தாதர் பஸ்நிலையத்தில் பிரியங்கா என்ற பெண் பயணி கூறியதாவது:-
நான் செம்பூரில் வசித்து வருகிறேன். வேலை காரணமாக தினமும் பஸ்சில் தாதர் வந்து செல்கிறேன். தினமும் தாதர் வந்து, செல்ல ரூ.44 பஸ் கட்டணம் ஆனது. ஆனால் தற்போது வர ரூ.10, போக ரூ.10 என மொத்தமே ரூ.20 தான் ஆகிறது என மகிழ்ச்சியுடன் கூறினார்.
இந்த கட்டண உயர்வு ஏழை மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.
கட்டண குறைப்பு காரணமாக நேற்று வழக்கத்தை விட பஸ்நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஆனால் குறைந்த அளவே பஸ்கள் இயக்கப்படுவதாகவும், பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதாகவும் பயணிகள் குற்றம் சாட்டினர்.
இதுகுறித்து பயணி ஒருவர் கூறுகையில், பஸ்சுக்காக அதிகளவில் பயணிகள் காத்திருக்கின்றனர். ஆனால் ஒரு வழிதத்தடத்துக்கு 20 முதல் 30 நிமிடங்களுக்கு ஒரு முறை மட்டுமே பஸ்கள் இயக்கப்படுகின்றன. எனவே கட்டணத்தை குறைத்தாலும் பொதுமக்களை நீண்ட நேரம் காத்திருக்க வைக்காமல் அடிக்கடி பஸ்களை இயக்கினால் மட்டுமே பெஸ்ட் பஸ் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றார்.