Tamilசெய்திகள்

மும்பையில் உள்ள இந்திய நுழைவாயிலில் குப்பை கொட்டிய நபர்கள் – வீடியோ வெளியிட்டு வருத்தம் தெரிவித்த ஆனந்த் மஹிந்திரா

தொழில் அதிபரான ஆனந்த் மஹிந்திரா எக்ஸ் பக்கத்தில் மிகவும் ஆக்டிவ் ஆக இருப்பவர். சாதனைகள் செய்யும் நபர்களின் வீடியோ, உத்வேகம் அளிக்கும் வீடியோ போன்றவற்றை ஷேர் செய்து உலகிற்கு அதை வெளிக்காட்டும் ஆர்வம் கொண்டவர். அடிக்கடி இதுபோன்று பல்வேறு வீடியோக்களை ஷேர் செய்வதால், இவரை டுவிட்டரில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பின்தொடர்ந்து வருகிறார்கள்.

சமீபத்தில் ஒருவர் பதிவிட்ட வீடியோ, இவரை காயப்படுத்தியுள்ளது. இந்தியாவின் முக்கியமான நகரம் மும்பை. மும்பையில் இந்தியாவின் நுழைவாயில் உள்ளது. இந்த நுழைவாயில் அருகே இரு நபர்கள், சாக்குப்பைகளில் உள்ள குப்பைகளை தண்ணீரில் கொட்டுவது போன்று அந்த வீடியோ காட்சி உள்ளது.

அந்த வீடியோவுடன் மும்பையின் சிறந்த குடிமகன்கள். இந்திய நுழைவாயில் பகுதியில் காலை நேரத்தில் எடுக்கப்பட்டது எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோதான் தன்னை காயப்படுத்தியதாக ஆனந்த் மகேந்திரா தெரிவித்துள்ளார். மேலும், பொதுமக்களின் அணுகுமுறை மாற்றம் அடையாவிட்டால், நகரின் சிறந்த வாழ்க்கைக்கு மனித அளவிலான எந்த கட்டமைப்பு முன்னேற்றமும் முன்னேற்றத்தை கொடுக்காது எனத் தெரிவித்ததுடன், மும்பை போலீஸ் அதிகாரி, மாநகர கவுன்சிலர் ஆகியோரை டேக் செய்துள்ளார்.

இந்தியாவை தூய்மையாக வைத்திருக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்திய அரசு “தூய்மை இந்தியா” திட்டத்தை அறிமுகப்படுத்தி, பல ஆயிரம் கோடி ரூபாய் இதற்காக செலவிட்டு வருகிறது. அப்படி இருந்தும் இதுபோன்று குப்பைகள் கொட்டப்பட்டுதான் வருகிறது.