Tamilவிளையாட்டு

மும்பே வான்கேடே மைதானத்தில் சச்சின் டெண்டுல்கருக்கு முழு உருவ சிலை

கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் தெண்டுல்கர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்று 10 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் மும்பை வான்கடே மைதானத்தில் தெண்டுல்கரின் முழு உருவசிலை அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

தெண்டுல்கர் தனது 50-வது பிறந்தநாளை வருகிற ஏப்ரல் 24-ந்தேதி கொண்டாட உள்ளார். அவருக்கு நினைவு பரிசாக இருக்கும் வகையில் ஐ.பி.எல். போட்டியின்போது (மார்ச் 31-ந்தேதி முதல் மே 28-ந்தேதி வரை நடக்கிறது) சிலையை திறக்க திட்டமிட்டுள்ளனர். ஏப்ரல் 24-ந்தேதிக்குள் முடியவில்லையென்றால் அக்டோபர், நவம்பரில் நடக்கும் 50 ஓவர் உலக கோப்பையின் போது சிலை திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மும்பை கிரிக்கெட் சங்க தலைவர் அமோல் காலே கூறும் போது, 50 வயதை தொடவுள்ள சச்சின் தெண்டுல்கரை பாராட்டும் வகையில் அவருக்கு மும்பை கிரிக்கெட் சங்கம் செய்யும் சிறிய அடையாளமாக இந்த சிலை இருக்கும்.

இதுகுறித்து அவரிடம் பேசி ஒப்புதல் பெற்றோம் என்றார்.

இதுகுறித்து தெண்டுல்கர் கூறும்போது, இது எனக்கு இன்ப அதிர்ச்சியை அளித்தது. எனது கிரிக்கெட் வாழ்க்கை இங்கேதான் தொடங்கியது. நம்ப முடியாத நினைவுகளுடன் கூடிய பயணங்களை நினைக்கும் இடம் இது. எனது கிரிக்கெட் வாழ்க்கையின் சிறந்த தருணம் என்பது 2011-ம் ஆண்டு இந்த மைதானத்தில் உலக கோப்பையை வென்றதுதான். நான் கடைசியாக விளையாடிய சர்வதேச போட்டியும் இந்த மைதானத்தில்தான். இது எனக்கு மிகவும் சிறப்பான தருணம் என்றார்.

ஏற்கனவே வான்கடே மைதானத்தில் தெண்டுல்கர் பெயரில் பெவிலியன் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.