திருவொற்றியூர் விம்கோ நகர், ராமநாதபுரம் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிவாரண உதவிகள் வழங்கினார்.
அப்போது அவர் கூறும்போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசின் உதவிகள் கொடுத்ததாக கண்களுக்கு தெரியவில்லை. தமிழக அரசு மழைவெள்ள முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தவறிவிட்டது. 10 நாட்களுக்கு முன்பே வானிலைமையம் எச்சரிக்கை விடுத்தும் அதனை மக்களுக்கு சரியான முறையில் அரசு எடுத்துச் செல்ல வில்லை.
பொதுமக்களுக்கு நிவாரண உதவிகள் சரியாக வழங்கப்படவில்லை. இந்த பகுதியில் ஏராளமான ரசாயன கழிவுகள் மழை தண்ணீரில் கலந்து உள்ளன. இதனால் பொதுமக்களுக்கு தோல் மற்றும் கண் எரிச்சல் ஏற்படுவதாக கூறுகின்றனர்” என்றார். முன்னதாக ஓ.பன்னீர்செல்வம், வடிவுடையம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார். அப்போது முன்னாள் எம்.எல்.ஏ. ஜே.சி.டி பிரபாகரன், புகழேந்தி ,அமைப்புச் செயலாளர் முருகேசன், மாவட்ட செயலாளர்கள் கே.கிருஷ்ணன்,ஜே.கே.ரமேஷ் உடன் இருந்தனர்.