ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஷிபு சோரன் உடல்நலக் குறைவால் புதுடெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
79 வயதான ஷிபு சோரனுடன் அவரது மகனும் ஜார்க்கண்ட் முதல்வருமான ஹேமந்த் சோரன் மருத்துவமனைக்குச் சென்றார். இதையடுத்து, முதல்வர் ராஞ்சிக்குத் திரும்பினார். அங்கிருந்து ஒரு விழாவில் கலந்துகொள்வதற்காக ஹசாரிபாக் செல்லவிருந்தார்.
ஆனால் அவரது ஹெலிகாப்டரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் பயணம் ரத்தானது. கடந் சனிக்கிழமையன்று, ஜி 20 மாநாட்டின்போது ஜனாதிபதி திரௌபதி முர்மு வழங்கிய விருந்தில் முதல்வர் கலந்து கொண்டார். அவருடன் ஷிபு சோரனும் டெல்லியில் உள்ள மருத்துவமனைக்கு வழக்கமான பரிசோதனைக்காக சென்றிருந்தார்.
இந்நிலையில், ஷிபு சோரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ஜார்க்கண்டு மாநில முதல்வர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறுகையில், ” மதிப்பிற்குரிய பாபாவுக்கு உடல்நிலை சரியில்லை. இதனால் ராஞ்சியில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிறப்பு மருத்துவர்களின் மேற்பார்வையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்” என்று குறிப்பிட்டிருந்தார். முன்னாள் முதல்வர் ஷிபு சோரன், 2005 முதல் 2010 வரை மூன்று முறை ஜார்க்கண்ட் முதல்வராகப் பதவி வகித்தார். எட்டு முறை மக்களவை உறுப்பினராக இருந்த அவர் தற்போது ராஜ்யசபா எம்.பியாக உள்ளார்.