Tamilசெய்திகள்

முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது

ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வர் என். சந்திரபாபு நாயுடு (73), தெலுகு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர சட்டசபை எதிர்கட்சி தலைவருமாவார்.

கடந்த ஆட்சி காலத்தில் ஆந்திர பிரதேச திறன் மேம்பாட்டு கழகத்தில் சுமார் ரூ.3 ஆயிரம் கோடி அளவிற்கு ஊழல் நடந்ததாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இது குறித்து தீவிர விசாரணைக்கு சி.ஐ.டி. பிரிவினருக்கு தற்போதுள்ள ஆந்திர அரசு கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது. அந்த விசாரணையை தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 10 அன்று, திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கில் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து விஜயவாடாவில் உள்ள ஊழல் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு அவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து ராஜமுந்திரி சிறைச்சாலையில் அவர் அடைக்கப்பட்டார்.

சிறையில் அவர் உடல் ஆரோக்கியத்தில் சரிவு ஏற்பட தொடங்கியது. மேலும், அவருக்கு கண் பார்வை குறைபாடுகளை சரி செய்ய அவருக்கு கண் புரை அறுவை சிகிச்சையும் தேவைப்பட்டது. எனவே, இதற்கு அனுமதிக்குமாறு நீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு ஜாமின் கோரியிருந்தார். அந்த மனுவை பரிசீலனை செய்த ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றம், அக்டோபர் 31 அன்று அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது.

ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சந்திரபாபு நாயுடுவிற்கு கண் புரை அறுவை சிகிச்சை நடைபெற்றது. தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டியுள்ளதால் இடைக்கால ஜாமினை சாதாரண ஜாமினாக மாற்ற கோரி அவர் மனு தாக்கல் செய்தார். இன்று அவருக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் சாதாரண ஜாமின் வழங்கியது.

இதனை வழங்கிய ஆந்திர உயர் நீதிமன்ற நீதிபதி, இடைக்கால ஜாமினில் விதிக்கப்பட்டுள்ள உத்தரவுகளை அவர் கடைபிடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். இதனால், அரசியல் நிகழ்ச்சிகள் மற்றும் பொதுக்கூட்டங்களில் சந்திரபாபு நாயுடு கலந்து கொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.