முன்னாள் மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் உடலுக்கு அரசியல் தலைவர்கள் அஞ்சலி
முன்னாள் மத்திய-மந்திரி சுஷ்மா சுவராஜ் (67) உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில், சிகிச்சை பலனளிக்காமல் காலமானார்.
இதையடுத்து அவரது உடல், எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் டெல்லியில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. சுஷ்மா சுவராஜ் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கு அஞ்சலி செலுத்த அவரது உடல் இன்று காலை 11 மணி வரை வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் மறைந்த முன்னாள் மத்திய-மந்திரி சுஷ்மா சுவராஜின் உடல் பாஜக தலைமை அலுவலகத்தில் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை கட்சியினர் மரியாதை செலுத்த வைக்கப்படும் எனவும், பின்னர் 3 மணிக்கு டெல்லி லோதி ரோடு மயானத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படும் என பாஜகவின் செயல் தலைவர் ஜெ.பி.நட்டா அறிவித்துள்ளார்.
இதற்கிடையே சுஷ்மா சுவராஜின் மறைவிற்கு மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ரவிசங்கர் பிரசாத், தர்மேந்திர பிரதான், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா உட்பட முக்கிய தலைவர்கள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இதேபோல் காங்கிரஸ் எம்.பி.யும், மாநிலங்களவையின் தலைவருமான குலாம் நபி ஆசாத், சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவுத் உட்பட பிற கட்சி தலைவர்களும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நேரில் சென்று சுஷ்மா சுவராஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.