பிரதமர் மோடி தலைமையிலான கடந்த பா.ஜனதா ஆட்சியின் போது நிதி மந்திரியாக இருந்தவர் அருண்ஜெட்லி. கடந்த ஓராண்டுக்கும் மேலாக இவர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். இதன் காரணமாக சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் அருண்ஜெட்லி போட்டியிடவில்லை.
கடந்த 9-ந்தேதி அவருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சுவாசப் பிரச்சனை மற்றும் உடல் சோர்வால் பாதிக்கப்பட்ட அவர் உடனடியாக டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.
முதலில் பிரதமர் மோடி மற்றும் மூத்த மந்திரிகள் அங்குசென்று அருண்ஜெட்லி உடல்நிலை குறித்து டாக்டர்களிடம் விசாரித்து அறிந்தனர். பின்னர் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவும் சென்று விசாரித்தார்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு சென்று அருண் ஜெட்லி உடல்நிலை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். அருண்ஜெட்லிக்கு பல்வேறு மருத்துவ நிபுணர்களை கொண்ட குழு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தாலும், அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. தொடர்ந்து அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்து வந்தது.
இந்நிலையில் இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அருண் ஜெட்லி உயிரிழந்தார்.