X

முன்னாள் துணை வேந்தர் வீட்டில் 100 சவரன் தங்க நகைகள் கொள்ளை

தூத்துக்குடி சின்னமணி நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் சுகுமார்(வயது 70). இவர் நாகை ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இவரது மனைவி புனிதா சென்னையில் ஆடிட்டராக உள்ளார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். சுகுமார் கடந்த 10-ந்தேதி சென்னையில் உள்ள தனது குடும்பத்தினரை பார்க்க சென்று உள்ளார். சமீபத்தில் இவர் தனது குடும்பத்தினருடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். சமீபத்தில் இவர் தனது குடும்பத்தினருடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.

இவரது வீட்டில் தூத்துக்குடி சிலோன் காலனியை சேர்ந்த அமுதா என்பவர் வீட்டு வேலைகளை பார்த்து வருகிறார். நேற்று மாலை வழக்கம் போல அவர் வீட்டை பூட்டி விட்டு சென்று விட்டார். இன்று அதிகாலை கதவை திறக்க அமுதா வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்ட அவர் அதிர்ச்சி அடைந்தார்.

உடனே அவர் சுகுமாருக்கு செல்போனில் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து சுகுமார் தூத்துக்குடி தென்பாகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த போலீசார் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த பொருட்கள், துணிமணிகள் சிதறிக்கிடந்தன. வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து மர்மநபர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர் என்பதை அறிந்த போலீசார், சென்னையில் உள்ள சுகுமாரை செல்போனில் தொடர்பு கொண்டு வீட்டில் வைக்கப்பட்டிருந்த நகை, பணம் குறித்து கேட்டறிந்தனர்.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மோப்பநாய் சீனோ வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. அந்த நாய் சுகுமாரின் வீடு அமைந்துள்ள தெருவின் முனை பகுதி வரை ஓடிச்சென்று திரும்பிவிட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. தடயவியல் நிபுணர்களுடன் சென்று சோதனை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இவரது வீட்டின் முன்பக்க சுவர் ஏறி குதித்து உள்ள சென்ற மர்மநபர்கள் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து லாக்கரில் வைத்திருந்த சுமார் 100 பவுனுக்கும் மேற்பட்ட தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர் என்பது தெரியவந்தது.

சுகுமார் வந்த பின்பு தான் வீட்டில் எவ்வளவு தங்க நகைகள் மற்றும் பணம் எவ்வளவு இருந்தது என்பது முழுமையாக தெரியவரும். இதை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்படி போலீசார் திருட்டு போன வீடு மற்றும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து 3 தனிப்படைகள் அமைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.