முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு சொந்தமான 57 இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை!
தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த சில மாதங்களாகவே தொடர்ச்சியாக இந்த சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
அந்த வகையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரான தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த கே.பி.அன்பழகன் வீடு மற்றும் இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தப்பட்டது.
சென்னை, தர்மபுரி, சேலம் உள்ளிட்ட இடங்களில் 100-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் கே.பி.அன்பழகனுக்கு சொந்தமான 57 இடங்களில் இன்று அதிரடியாக புகுந்து சோதனை நடத்தி வருகிறார்கள்.
தருமபுரி மாவட்டம் கெரகோடஅள்ளி கிராமத்தில் கே.பி.அன்பழகனுக்கு சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டில் இன்று காலை 7 மணி அளவில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென புகுந்து சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் போது வீட்டுக்குள் வெளி ஆட்கள் யாரையும் அனுமதிக்கவில்லை. வீட்டில் இருந்தவர்களையும் வெளியில் செல்வதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.
கே.பி.அன்பழகன் வீட்டில் அனைத்து அறைகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர். வீட்டு வளாகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் போது வீட்டில் இருந்த பல்வேறு ஆவணங்களை எடுத்து போலீசார் சரிபார்த்தனர்.
அந்த ஆவணங்கள் தொடர்பாக வீட்டில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 2016-ம் ஆண்டில் இருந்து 2021-ம் ஆண்டு வரையில் கே.பி.அன்பழகன் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தார். அப்போது அவர் தனது பதவியை தவறாக பயன்படுத்தி முறைகேடான வழியில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார்கள் வந்தது.
இதன் அடிப்படையிலேயே வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கே.பி.அன்பழகன், அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன், மருமகள் வைஷ்ணவி (சந்திரமோகனின் மனைவி) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதன் அடிப்படையிலேயே இன்றைய சோதனை நடைபெற்று உள்ளது.
கே.பி.அன்பழகனுக்கு சந்திரமோகன், சசிமோகன் என 2 மகன்கள் உள்ளனர். இவர்களில் சந்திரமோகன் மூத்த மகன் ஆவார். 32 வயதான அவர் திருமணமாகி மனைவி வைஷ்ணவியுடன் கெரகோட அள்ளி கிராமத்திலேயே வசித்து வருகிறார்.
இவரது வீட்டிலும் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
கே.பி.அன்பழகனின் ஊரான கெரகோடஅள்ளியில் வசித்து வரும் அவரது உறவினர்கள் சந்திரசேகர், சம்பத், சண்முகம், மகேஷ் குமார் ஆகியோரது வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தப்பட்டது.
இதேபோல் காரிமங்கலம் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் செந்தில்குமார், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் மாணிக்கம் ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.
பாலக்கோட்டில் கே.பி.அன்பழகனின் ஆதரவாளர்கள் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது.
தருமபுரி பெரியாம்பட்டி அருகே உள்ள கல்குவாரி, ரெடிமிக்ஸ் மற்றும் காரிமங்கலம் காமராஜ் நகரில் உள்ள ஆஸ்பத்திரி மற்றும் பள்ளி உள்ளிட்ட நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று அதிரடியாக சோதனை நடத்தினர்.
கே.பி.அன்பழகனின் தீவிர ஆதரவாளரும், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி எம்.எல்.ஏ.வுமான கோவிந்தசாமி வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தப்பட்டது. தருமபுரி இலக்கியம்பட்டியில் உள்ள கோவிந்தசாமி வீட்டில் 10-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று சோதனை நடத்தி ஆவணங்களை ஆய்வு செய்தனர்.
தருமபுரி கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள கே.பி.அன்பழகனின் உதவியாளர் பொன்னுவேல் வீடு, தருமபுரி நகர செயலாளர் பூக்கடை ரவி வீடு ஆகிய இடங்களிலும் சோதனை நடைபெற்றது.
தருமபுரி மாவட்டத்தில் மட்டும் கே.பி.அன்பழகனின் ஆதரவாளர்கள், உறவினர்கள் வீடு என மொத்தம் 41 இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர்.
கே.பி.அன்பழகன் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார். கல்குவாரி, ஹாட்மிக்ஸ் பிளாண்ட் போன்ற தொழில்களில் ஈடுபட்டு வரும் கே.பி. அன்பழகன் குடும்பத்தினர் ஆஸ்பத்திரி கிளினிக் மற்றும் பள்ளிக்கூடங்களையும் நடத்தி வருகிறார்கள். இந்த நிறுவனங்கள் தர்மபுரி மாவட்டம் பெரியான்பட்டியில் செயல்பட்டு வருகிறது.
காரிமங்கலம் காமராஜ் நகரில் ஆஸ்பத்திரி மற்றும் பள்ளிக்கூடங்கள் இயங்கி வருகிறது. இங்கும் சோதனை நடத்தப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக சென்னையில் 3 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு உள்ளது. சென்னை கோபாலபுரம் அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அலுவலகம், நுங்கம்பாக்கம் கத்தீட்ரல் கார்டன் லைன், அடையாறு காந்திநகர் 2-வது மெயின் ரோட்டில் உள்ள சிவக்குமார் என்பவரது அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும் இந்த சோதனை நடைபெற்று உள்ளது.
இவர் கே.பி.அன்பழகனுக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.
கோபாலபுரத்தில் கணேஷ் கிரானைட் என்கிற பெயரிலான நிறுவன அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்திலும் இன்று சோதனை நடத்தப்பட்டது.
இது தவிர தெலுங்கானா மாநிலம் கரீம் நகரில் உள்ள கே.பி.அன்பழகனுக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சோதனையின் போது லஞ்ச ஒழிப்பு போலீசார் பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஆவணங்களின் அடிப்படையில் அடுத்த கட்ட விசாரணை நடத்துவது பற்றி போலீசார் ஆலோசித்து வருகிறார்கள்.
கே.பி.அன்பழகனுக்கு சொந்தமான 57 இடங்களில் நடத்தப்பட்டு வரும் சோதனையில் கிடைத்துள்ள ஆவணங்கள் பற்றிய விவரங்களை இன்று மாலையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வெளியிட உள்ளனர்.
லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் நகை-பணம் ஆகியவையும் சிக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிடிபட்ட நகை- பணம் எவ்வளவு? அதற்குரிய கணக்கு இருக்கிறதா? என்பது பற்றிய தகவல்களையும் போலீசார் சேகரித்து வருகிறார்கள். இன்று மாலையில் இது தொடர்பாகவும் விரிவான தகவல்களை அவர்கள் வெளியிடுகிறார்கள்.
ஏற்கனவே 5 முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டுள்ள நிலையில் இன்று கே.பி.அன்பழகன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனை அ.தி.மு.க.வினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.