உடல்நலக் குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி (67), சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். அவரது உடல் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் டெல்லியில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், உள்துறை மந்திரி அமித்ஷா, பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லியின் உடல் டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு தமிழகத்தின் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். மேலும், பொதுமக்கள் பலரும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அதன்பின்னர், அவரது உடல் வாகனத்தில் ஏற்றப்பட்டு டெல்லியின் யமுனைக் கரையில் உள்ள நிகம்போத் மயானத்துக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. ஊர்வலத்தில் முக்கிய தலைவர்கள் கார்களும் பின் சென்றன. பின்பு துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அருண் ஜெட்லியின் உடல் தகனம் செய்யப்பட்டது.
அங்கு நடைபெற்ற இறுதிச் சடங்கில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.