பாலிவுட் சினிமாவில் சர்ச்சைக்குரிய படங்களை எடுக்கும் இயக்குனர்களில் அனுராக் காஷ்யப் முக்கியமானவர். அவர் எடுக்கும் திரைப்படங்கள் ஒரு மாறுபட்ட கதைக்களத்துடன் மற்றும் முரண் பட்ட சிந்தனையுடன் இருக்கும், கடந்த ஆண்டு வெளியான லியோ திரைப்படத்தில் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்.
அவர் அடுத்து இயக்க போகும் படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்று மும்பையில் தொடங்கியது. இப்படத்தில் பாபி தியால் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் சன்யா மல்ஹோத்ரா இணைந்து நடிக்கவுள்ளார். இவர்களுடன் ஜோஜு ஜார்ஜ் மற்றும் சபா அசாத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். இது ஒரு திரில்லர் கதைக்களத்துடன் உருவாக இருக்கும் படமாகும்.
சன்யா மல்ஹோத்ரா ‘லவ் ஹாஸ்டல்’ திரைப்படத்திற்கு பிறகு பாபி தியாலுடன் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளார். மலையாள சினிமாவில் புகழ் பெற்ற நடிகரான ஜோஜு ஜார்ஜ் இப்படத்தின் மூலம் பாலிவுட்டில் களம் இறங்கியுள்ளார்.
இப்படத்தை நிகில் திவேதி தயாரிக்கவுள்ளார். இந்தாண்டு இறுதிக்குள் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.