முத்தலாக் தடை மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல்!
இஸ்லாமியர்களிடையே நிலவும் ‘உடனடி முத்தலாக்’ மூலம் விவாகரத்து செய்யும் முறையை கிரிமினல் குற்றமாக கருதும் மசோதா, கடந்த 17-ந் தேதி, நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மசோதா, சில எதிர்க்கட்சிகளின் வெளிநடப்புக்கிடையே, கடந்த 27-ந் தேதி நிறைவேற்றப்பட்டது.
மாநிலங்களவையிலும் நிறைவேறினால்தான், மசோதா சட்ட வடிவம் பெறும். எனவே, முத்தலாக் தடை மசோதாவை, மாநிலங்களவையில் இன்று மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் தாக்கல் செய்கிறார்.
மாநிலங்களவையில், ஆளும் பா.ஜனதா கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லை. 245 உறுப்பினர்களை கொண்ட சபையில், பெரும்பான்மைக்கு 123 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஆனால், பா.ஜனதா கூட்டணிக்கு 93 உறுப்பினர்கள்தான் இருப்பதாக தெரிகிறது. எனவே, எந்த அணியையும் சேராத கட்சி உறுப்பினர்களின் ஆதரவை எதிர்பார்த்து மத்திய அரசு நம்பிக்கையுடன் உள்ளது.
மாநிலங்களவையில் மசோதாவுக்கு ஆதரவு கிடைக்கும் என்று மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் நம்பிக்கை தெரிவித்தார். சபையில் இன்று தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று பா.ஜனதா உறுப்பினர்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
ஆனால், மாநிலங்களவையில் மசோதாவை தோற்கடிப்பதில் காங்கிரஸ் கட்சி தீவிரமாக உள்ளது. இதுபற்றி காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறுகையில், “மாநிலங்களவையில் முத்தலாக் மசோதாவை தோற்கடிப்பதில் மற்ற கட்சிகளுடன் கைகோர்த்து செயல்படுவோம். மக்களவையில் 10 கட்சிகள் இம்மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. அரசுக்கு ஆதரவான அ.தி.மு.க. போன்ற கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. எனவே, தற்போதைய வடிவத்தில் மசோதாவை நிறைவேற்ற விட மாட்டோம்” என்றார்.
முத்தலாக் மசோதாவை நாடாளுமன்ற கூட்டு தேர்வுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வற்புறுத்தி வருகின்றன. காங்கிரஸ் உறுப்பினர்கள் தவறாமல் சபைக்கு வருமாறு கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே, முத்தலாக் மசோதாவுக்கு அகில இந்திய முஸ்லிம் பெண்கள் தனிநபர் சட்ட வாரியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதன் தலைவி சாயிஸ்டா அம்பர் கூறியதாவது:-
முத்தலாக் சட்டம், குரான் சொன்னபடி உருவாக்கப்பட்டு இருக்க வேண்டும். அதில், உடன்பாட்டுக்கான வாய்ப்பு இருக்க வேண்டும். பெண்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கு பதிலாக, ஆண்களை தண்டிப்பதற்கே முக்கியத்துவம் அளித்தால், நாங்கள் போராட்டம் நடத்துவோம். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், குடும்பங்கள் அழிந்து விடும்.
இவ்வாறு அவர் கூறினார்.