X

முதியவர்களுக்கு தடுப்பூசி! – தமிழகத்தில் தொடக்கம்

முதியவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

சளி, தொடர் இருமல், காய்ச்சல், உடல்வலி, மூச்சுத்திணறல் இருந்தால் அது நிமோனியா நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். இருமல் அதிகரிக்கும்போது சிலருக்கு சளியில் ரத்தமும் கலந்திருக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களின் காது மற்றும் மூளையை பாதித்து உயிருக்கு ஆபத்தை விளைவித்துவிடும். எனவே 50 வயதைக் கடந்தவர்கள் இதற்கான தடுப்பூசியை ஆயுளுக்கு ஒருமுறை மட்டும் எடுத்துக்கொண்டால் போதும்.

ஒரு சிலருக்கு மட்டும் சில ஆண்டுகள் கழித்து தேவைப்பட்டால் 2-வது தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம். அரசு மானியம் பெறும் முதியோர் இல்லங்களில் தங்கி பயனடையும் முதியோரை நோய் தொற்றில் இருந்து பாதுகாக்க சுகாதாரத்துறையினர் மூலம் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு நிமோனியா தடுப்பூசி அளிக்கப்படும்.

இந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மூத்த குடிமக்களின் உதவிக்காக 1253 மற்றும் 1800-180-1253 (சென்னை தவிர) ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags: south news