X

முதல் டி20 போட்டியில் தாமதமாக பந்து வீசிய இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு அபராதம்

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி தரோபாவில் உள்ள பிரையன் லாரா ஸ்டேடியத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரோமன் பாவெல் 48 ரன்கள் குவித்தார். நிகோலஸ் பூரன் 41 ரன்கள் எடுத்தார்.

இந்திய அணி சார்பில் அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். இதையடுத்து, 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. திலக் வர்மா அதிரடியாக ஆடி 39 ரன்னும், சூர்யகுமார் யாதவ் 21 ரன்னும், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 19 ரன்னும் எடுத்தனர். இதன்மூலம் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி பெற்றதுடன், டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், முதல் டி20 போட்டியில் தாமதமாக பந்து வீசியதற்காக இந்திய அணிக்கு போட்டிக் கட்டணத்தில் இருந்து 5 சதவீதம் அபராதம் விதித்தது ஐசிசி. இதேபோல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 10 சதவீதம் அபராதம் விதித்துள்ளது ஐசிசி.