இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா, முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 502 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா 2-வது நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 39 ரன்கள் எடுத்திருந்தது. நேற்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. பவுமா 18 ரன்கள் எடுத்த நிலையில் இசாந்த் சர்மா பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து டீன் எல்கர் உடன் கேப்டன் டு பிளிசிஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. டு பிளிசிஸ் 55 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். எல்கர் மற்றும் டி காக்கின் சதத்தால் தென் ஆப்பிரிக்கா அணியின் ஸ்கோர் கணிசமாக உயர்ந்தது.
எல்கர் 160 ரன்னிலும் டி காக் 111 ரன்னிலும் வெளியேறினர். அடுத்து வந்த பிலாண்டர் ரன்ஏதும் எடுக்காமலும் வெளியேறினார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 8 விக்கெட் இழப்பிற்கு 385 ரன்கள் சேர்த்தது.
இன்று 4-வது நாள் ஆட்டத்தை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா 431 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. முத்துசாமி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 33 ரன்கள் எடுத்திருந்தார். இந்தியா தற்போது 71 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்தியா தரப்பில் அஸ்வின் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜடேஜா 2 விக்கெட்டும் இஷாந்த் சர்மா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.