முதல்வர் நாராயணசாமி தொடர் தர்ணா போராட்டம்! – டெல்லி சென்ற கிரண்பேடி
புதுச்சேரியில் கிரண்பேடி கவர்னராக பொறுப்பேற்றதில் இருந்து அவருக்கும், முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. அரசுத் திட்டங்களை செயல்படுத்த விடாமல் கவர்னர் தடுப்பதாகவும், இதனால் அரசுப் பணிகள் முடங்கியிருப்பதாகவும் தொடர்ந்து புகார் கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இருசக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற சட்டத்தை போலீசார் அமல்படுத்த வேண்டும் என்று கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டது, அரசியலில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. கவர்னரின் இந்த உத்தரவுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லை.
ஹெல்மெட் அணியாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்தது. பொதுமக்கள் இந்த எச்சரிக்கையை புறக்கணித்ததால் 2 நாட்களில் 30 ஆயிரம் வாகன எண்கள் விதிமுறைகளை மீறியதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
கட்டாய ஹெல்மெட் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபை வளாகத்தில் ஹெல்மெட்டை போட்டு உடைத்து போராட்டம் நடத்தினர். காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் தி.மு.க.வினரும் கட்டாய ஹெல்மெட் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஹெல்மெட் விவகாரம் பெரும் கொந்தளிப்பு ஏற்படுத்தியதை அறிந்த முதல் அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் காங்கிரஸ் கட்சியினரும் ஆளுநர் மாளிகை எதிரே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று 2வது நாளாக முதலமைச்சரின் தர்ணா போராட்டம் நீடிக்கிறது. தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் தொடரும் என நாராயணசாமி அறிவித்துள்ளார்.
எதிர்ப்பு வலுத்துள்ள நிலையில், இன்று காலை ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியே வந்த கிரண்பேடி, வெளியே சென்றார். அவர் டெல்லி புறப்பட்டு சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆளுநர் மாளிகை வளாகம் போராட்டக்களமாக மாறியிருப்பதால், அதிவிரைவு அதிரடிப்படை மற்றும் தொழில் பாதுகாப்புப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.