வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தாயகம் திரும்பினார். மதுரை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக முதல்வரின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின்போது பல்வேறு துறைகளுக்கான வெற்றிக்கும், வளர்ச்சிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. பால் வளத்துறையை பொறுத்தமட்டில் புதிய யுக்தியை கையாண்டு உற்பத்தி திறனை அதிகரிக்கும் திட்டங்களோடு வந்துள்ளோம்.
சுதந்திரம் பெற்றதில் இருந்து இன்றளவும் தமிழகத்துக்கு முதலீட்டை பெறுவதற்காக வெளிநாட்டு பயணம் மேற்கொண்டது முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை தவிர அனைவரும் முதல்வரின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை வரவேற்றுள்ளனர்.
குறுகிய காலத்தில் ரூ. 8,500 கோடிக்கு படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கக்கூடிய ஏற்பாடுகளை மேற்கொள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. முதல்வரின் வளர்ச்சியை தடுக்கின்றவர்களை நாங்கள் குறுக்கிட்டு தடுக்கும் தளபதிகளாக என்றும் இருப்போம்.
நயாகரா அருவியில் போஸ் கொடுப்பதற்கு நான் ஒன்றும் சினிமா நடிகர் அல்ல.
உழைத்து முன்னேறக் கூடிய கூட்டம்தான். அ.தி.மு.க. உழைத்து மக்களை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லக்கூடிய ஆட்சிதான் எடப்பாடியின் ஆட்சி. அதை கெடுக்கின்ற கூட்டமாகத்தான் தி.மு.க. உள்ளது.
தற்போது மக்களின் தேவை அதிகரித்துவிட்டது. வான்வழி போக்குவரத்து, சாலைப் போக்குவரத்து, ரெயில் போக்குவரத்து உள்பட அனைத்து போக்குவரத்தும் அதிகரித்த வண்ணமே உள்ளது. மக்களின் தேவை அதிகரிக்கும்போது பொருளாதார பிரச்சனை வரும். அதனை சரிசெய்வதற்காகத்தான் மத்திய அரசும் மாநில அரசும் இருக்கிறது.
அ.ம.மு.க.வில் இருந்து புகழேந்தி விலகப் போவது கிடையாது. கூடிய விரைவில் டி.டி.வி. தினகரனும் விலகிச் சென்று விடுவார்.
டி.டி.வி தினகரன் நாடகத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவருடன் இருப்பவர்கள் உள்பட யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. யாரும் அந்த கட்சியில் இருக்க மாட்டார்கள்.
தினகரன் கட்சிக்கு மக்களிடையே மாஸ் குறைந்துவிட்டது. முதல்வர் எடப்பாடிதான் மக்களின் பாஸ்.
இவ்வாறு அவர் கூறினார்.