தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு அடுத்த மாதம் 18-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுடன் காலியாக உள்ள 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்தில் இருந்து இன்று பிரசாரத்தை தொடங்கினார். வழக்கமாக எந்த தேர்தல் வந்தாலும் எடப்பாடி பழனிசாமி ஆத்தூர் அருகே உள்ள கருமந்துறை வெற்றி விநாயகர் கோவிலில் தரிசனம் செய்து பிரசாரத்தை தொடங்குவார். வழக்கம்போல் இந்த தேர்தலிலும் கருமந்துறை வெற்றி விநாயகர் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு பிரசாரத்தை தொடங்கினார்.
முதற்கட்டமாக அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளரான கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் சுதீசை ஆதரித்து பிரசாரம் செய்தார். அவரை சுதீஷ் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். அதிமுக தேர்தல் அறிக்கையில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை விநியோகித்து, கடை கடையாக சென்று வாக்கு சேகரித்தார். பின்னர் திறந்த வேனில் சென்று சுதீஷுக்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய அவர், நாட்டில் நிலையான ஆட்சி இருந்தால்தான் மக்கள் நிம்மதியாக வாழ முடியும் என்றும், நாட்டை பாதுகாக்க பிரதமர் நரேந்திர மோடியால்தான் முடியும் என்றும் முதலமைச்சர் பேசினார்.