Tamilசெய்திகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனான நட்புறவு என்றுமே இருக்கும் – பிரேமலதா விஜயகாந்த்

உடல்நலக்குறைவால் மறைந்த தே.மு.தி.க. நிர்வாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார்.

மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

பெட்ரோல், டீசல், கியாஸ் உள்ளிட்ட எல்லா பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துவிட்டது. மின்கட்டணமும் உயர்ந்துவிட்டது. இந்த விலைவாசி உயர்வு பொதுமக்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாகியுள்ளது. எனவே தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் சார்பாக இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் வருகிற 5-ந் தேதி நடைபெறுகிறது.

அரசியலில் வெற்றி, தோல்வி என்பது சகஜம். வெற்றியை கண்டு தே.மு.தி.க. ஆணவப்படுவதோ, தோல்வியை கண்டு துவண்டு போவதோ இல்லை. வலுவான கட்டமைப்புகளை உள்ளடக்கிய கட்சி.

அடுத்தக்கட்டத்திற்கு கட்சியை எடுத்துச் செல்வதற்கு நிறைய பணிகளை செய்து கொண்டிருக்கிறோம். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனான நட்புறவு என்றைக்குமே இருக்கும்.

நமது நாட்டு மக்களுக்கு எந்தத் தடுப்பூசி வேண்டும் என்பதை அரசு தான் முடிவு செய்ய வேண்டும்.

சசிகலா அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் தொலைபேசியில் பேசுவது, அக்கட்சியின் தனிப்பட்ட விஷயம். அதுபற்றி நான் கருத்து சொல்ல முடியாது. அவர்களிடம் தான் கேட்க வேண்டும்.

உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. தேர்தல் தேதி அறிவித்த பின்பு கட்சியின் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு, எங்களது நிலைப்பாட்டை அறிவிப்போம்.