X

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரமலான் பண்டிகை வாழ்த்து

ஈகைப் பெருநாளான ரமலான் பண்டிகை நாளை (வியாழக்கிழமை) கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அய்யூப் நேற்று இரவு 8 மணியளவில் அறிவித்தார். இதற்கிடையே கோவை-சாரமேடு கரும்பு கடை மற்றும் குமரி-வேர் கிளம்பி பகுதிகளில் பிறை தெரிந்ததாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேற்று இரவு 11 மணியளவில் அறிவிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து இஸ்லாமியர்களில் சிலர் இன்று ரம்ஜான் பண்டிகையை கொண்டாடினார்கள். தமிழ்நாட்டில் உள்ள பல நகரங்களில் கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டில் பெரும்பாலான முஸ்லிம்கள் நாளை ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுகிறார்கள். மசூதிகளில் சிறப்பு தொழுகையில் ஈடுபடுவார்கள்.

ரம்ஜான் பண்டிகையையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

நோன்புக் கடமைகளை முடித்து, ஈகைப் பண்பு சிறக்க ரமலான் திருநாளைக் கொண்டாடும் இசுலாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய ரம்ஜான் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மனித குலத்துக்கு மகத்தான எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் நபியடிகள். கல்வியை ஆண், பெண் இருவருக்கும் சமமாக்கியது, நீதி மற்றும் அமைதியை வலியுறுத்தியது, ஏற்றத்தாழ்வை அறவே எதிர்த்தது, சகோதரத்துவத்தையும் சகிப்புத்தன்மையையும் வலியுறுத்தியது என அவர் காட்டிய வழி அனைவரும் பின்பற்றத்தக்கதாகும். இல்லாதோருக்கு உதவுவதையும் அனைவரிடத்தும் அன்பு செலுத்துவதையும் போதித்தவர் நபிகள் நாயகம்.

அவரது வழியில் வாழ்ந்து வரும் இசுலாமியத் தோழர்களின் நலன் காக்கும் அரசாகக் கழக அரசு திகழ்ந்து வருகிறது. 2007-ல் சிறுபான்மையினர் நல இயக்குநரகம் உருவாக்கியது, மீலாதுநபிக்கு அரசு விடுமுறை, இசுலாமியர்களுக்கு 3.5 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு என எத்தனையோ சாதனைகளைச் செய்த தலைவர் கலைஞரின் வழியில், எல்லார்க்கும் எல்லாம் என்ற கோட்பாட்டைக் கொண்ட நமது திராவிட மாடல் அரசும் அவர்களது கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறது.

அதன்படியே, சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கு மாநில அரசின் வாழ்நாள் அங்கீகாரம், மதச்சார்பு சிறுபான்மையினர் சான்றிதழை நிரந்தரச் சான்றிதழாக வழங்க அரசாணை, தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம், கூட்டுறவு வங்கிகள் மூலம் சிறுபான்மையின மாணவர்களுக்கு, இனி 5 லட்சம் வரை கல்விக்கடன்.

இஸ்லாமிய மக்களுக்கான அடக்கஸ்தலங்கள் (கபர்ஸ்தான்) இல்லாத மாவட்டத் தலைநகரங்களில் தேவைப்படும் நிலத்தை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கையகப்படுத்தி மாநகராட்சி, நகராட்சி சார்பில் கபர்ஸ்தான் அமைப்பதற்கு நிருவாக ஒப்புதல் வழங்கி அரசாணை என எண்ணற்ற அறிவிப்புகளை அண்மையில் வெளியிட்டிருக்கிறோம்.

இதற்கெல்லாம், முத்தாய்ப்பாக ஒன்றிய பா.ஜ.க அரசு நிறுத்திவிட்ட சிறுபான்மையின மாணவர்களுக்கான உதவித் தொகை, தமிழ்நாடு அரசு நிதி உதவியுடன் வக்ப் வாரியம் மூலம் வழங்கப்படும் என்ற மகத்தான அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறோம்.

இசுலாமியரைப் பாகுபடுத்தும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகச் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இப்படி, இசுலாமியர்களின் சமூக, பொருளாதார, கல்வி வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை மேற் கொண்டு, அவர்களின் உரிமைகளுக்காக என்றும் முன்னிற்கும் பெருமிதத்தோடு, உரிமையோடு இசுலாமியத் தோழர்கள் அனைவருக்கும் எனது ரம்ஜான் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி:-

அ.தி.மு.க. ஆட்சிக் காலங்களில் இஸ்லாமிய மக்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு சிறுபான்மை மக்களின் நலன் பாதுகாக்கப்பட்டிருக்கிறது என்பதையும்; கழகம் என்றென்றும் சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழும் என்பதையும் இந்த இனிய தருணத்தில் பெருமையோடு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். தீமைகள் ஒழிந்து நன்மைகள் மீள, நாம் அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்வோமாக.