முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மும்பை செல்கிறார் – ராகுல் காந்தி யாத்திரை நிகழ்வில் கலந்துக்கொள்கிறார்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ‘பாரத ஒற்றுமை நீதி யாத்திரை’யை கடந்த ஜனவரி 14-ந்தேதி மணிப்பூரில் தொடங்கினார். இந்த யாத்திரை மராட்டியத்தில் நேற்று 4-வது நாளாக நடந்தது. பால்கர் மாவட்டத்தில் அவர் திறந்தவெளி வாகனத்தில் சென்றபடி பொதுமக்களை சந்தித்தார். மேலும் ஆங்காங்கே அவர் மக்கள் மத்தியில் பேசினார்.

ராகுல்காந்தியின் யாத்திரை இன்று (சனிக்கிழமை) தானே மாவட்டத்தில் நடைபெறுகிறது. அவர் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மும்பை தாதரில் உள்ள சட்டமேதை அம்பேத்கரின் நினைவிடமான சைத்யபூமியில் யாத்திரையை நிறைவு செய்கிறார்.
பின்னர் அன்று மாலையில் மும்பை சிவாஜி பார்க்கில் இந்தியா கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டத்துக்கு காங்கிரஸ் ஏற்பாடு செய்து உள்ளது. இந்த கூட்டத்தில் ராகுல்காந்தி பங்கேற்று பேசுகிறார்.

இதில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ராஷ்டிரிய ஜனதாதளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ்- சரத்சந்திர பவார் கட்சி தலைவர் சரத்பவார் கலந்துகொள்கிறார்கள்.

மேலும் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆம் ஆத்மி உள்ளிட்ட மற்ற கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்க இருப்பதாக மராட்டிய சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் விஜய் வடேடிவார் தெரிவித்தார். இந்த விழாவில் கலந்து கொள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை காலை விமானம் மூலம் மும்பை செல்கிறார். மும்பை செல்லும் அவர் ராகுல் காந்தியின் யாத்திரையில் கலந்த கொள்வதும், இந்தியா கூட்டணி பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருப்பதால், இந்த பொதுக்கூட்ட செலவு காங்கிரஸ் கட்சியின் செலவில் சேர்த்துக் கொள்ளப்படும் என விஜய் வடேடிவார் தெரிவித்துள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools