முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கர்நாடகா சென்றதை ஏற்றுக்கொள்ள மாட்டோம் – பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழக விவசாயிகள் காவிரி நீரை எதிர்நோக்கி இருக்கிறார்கள். ஆனால் தற்போது கிடைக்கும் நீரை கூட முழுமையாக தடுக்க புதிய அணையை மேகதாதுவில் கட்ட கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கர்நாடக மாநிலம் சென்று, அணை கட்ட முயற்சி எடுக்கும் அம்மாநில முதல்-மந்திரி சித்தராமையா மற்றும் அதற்கு மூளையாக இருக்கும் துணை முதல்-மந்திரி டி.கே.சிவகுமார் ஆகியோருடன் கை குலுக்கி கொண்டு, சோனியா காந்தி கொடுக்கும் விருந்தில் கலந்துகொள்ள சென்றுள்ளார். இதுவெந்துபோன விவசாயி இதயத்தில் ஈட்டி பாய்ச்சுவது போல இருக்கிறது.

எனவே தமிழக மக்களின் விருப்பத்துக்கு மாறாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கர்நாடகா சென்றது கண்டிக்கத்தக்கது. இதை எதிர்கட்சி கூட்டணிக்காக சென்றாக கருதவில்லை. விவசாயிகளின் கழுத்தை நெரிக்கின்ற கைகோர்ப்பு என்று நான் கருதுகிறேன். இது தமிழகத்துக்கான கேடு.

தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் அங்கு சென்று இருக்கலாம். ஆனால் 8 கோடி மக்களின் முதலமைச்சராக சென்று கைகுலுக்கி இருப்பதை ஏற்றுக்கொள்ள மாட்டோம். மேகதாதுவில் அணைகட்ட மாட்டோம் என்ற வாக்குறுதியை தந்தால் மட்டுமே கூட்டணியில் கைகோர்ப்போம் என்று மு.க.ஸ்டாலின் மற்றும் கே.எஸ்.அழகிரி கூறி இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் வாக்குறுதியை பெறவில்லை. அதனால் தான் இன்றைய தினத்தை துக்க தினமாக அனுசரித்து கருப்பு பட்டை அணிந்து இருக்கிறோம்.

கர்நாடகாவில் பா.ஜனதா ஆட்சியில் இருந்தபோதும் தண்ணீர் தரவில்லை என்று கூறுகிறீர்கள். யார் தண்ணீர் தரவில்லை என்றாலும் தவறுதான். ஊழல்வாதிகள் மீது எடுக்கும் நடவடிக்கை மக்கள் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தும். அமைச்சர் செந்தில் பாலாஜி அ.தி.மு.க. ஆட்சியின் போது செய்த தவறுக்காக தான் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news