முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த மாதம் (மே 7-ந்தேதி) பதவி ஏற்றது முதல் கொரோனா தடுப்பு பணிகளில் தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறார். ஒவ்வொரு நாளும் அதிகாரிகளை அழைத்து ஆய்வு மேற்கொள்கிறார்.
கடந்த மாதம் 30-ந்தேதி ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களுக்கு சென்று கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். கோவையில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் வார்டுக்கு கவச உடை அணிந்து சென்று அவர்களிடம் உடல்நலம் விசாரித்தார்.
வண்டலூரில் சிங்கங்களுக்கு கொரோனா பரவியதை கேள்விப்பட்டதும் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு நேரில் சென்று சிகிச்சை அளிக்கும் முறைகளை கேட்டறிந்தார்.
தற்போது காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து வருகிற 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்படுகிறது. முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று மேட்டூர் அணையை திறந்து வைக்கிறார்.
இதற்காக அவர் 12-ந்தேதி (சனிக்கிழமை) காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் செல்கிறார். அங்கிருந்து காரில் சென்று மேட்டூர் அணையை திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சி முடிந்ததும் சேலம் இரும் பாலையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கைகள் கொண்ட தற்காலிக ஆஸ்பத்திரியை பார்வையிடுகிறார்.
அதன் பிறகு சேலத்தில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்று அங்கிருந்து காரில் நாகப்பட்டினம் செல்கிறார். அன்று இரவு திருவாரூரில் தங்குகிறார். 13-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறார்.
முன்னதாக அன்று காலையில் திருக்குவளையில் தந்தை கருணாநிதி வாழ்ந்த இல்லத்துக்கு சென்று அவரது படத்துக்கு மரியாதை செலுத்துகிறார். அங்குள்ள தாத்தா, பாட்டி நினைவிடங்களிலும் மரியாதை செலுத்துகிறார்.
அதன் பிறகு அன்று மாலை திருச்சி வந்து விமானத்தில் சென்னை திரும்புகிறார்.