தமிழ் நாடு முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி வரும் 7 ஆம் தேதி இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்து மூன்றாவது ஆண்டை தொடங்க இருக்கிறது.
இந்த நிலையில், முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு அரசியல் சூழல், மக்கள் பிரச்சினைகள் உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
இதுமட்டுமின்றி அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து, அதற்கேற்ப பணியாற்றும் வகையில், சிலருக்கு அமைச்சர் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. சில அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்படும் என்றும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. எனினும் இதுபற்றி தமிழ் நாடு அரசு சார்பில் இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.