X

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் லண்டன் செல்கிறார்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஏற்கனவே கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் 24-ந் தேதி 4 நாள் பயணமாக துபாய் நாட்டுக்கு சென்று வந்தார். அப்போது அங்கு ‘துபாய் எக்ஸ்போ’ சர்வதேச தொழில் கண்காட்சியில் தமிழக அரங்கினை திறந்து வைத்தார். அங்கு தொழில் அதிபர்களை சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்குமாறு அழைப்பு விடுத்தார். 2 நாட்களாக துபாயில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

இதைத்தொடர்ந்து அபுதாபி சென்றார். அபுதாபி பயணம் மூலமும் ஏராளமான தொழில் அதிபர்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வந்தனர். துபாய், அபுதாபி பயணம் மூலம் தமிழ்நாட்டுக்கு மொத்தம் ரூ.2,600 கோடிக்கான முதலீடுகள் பெறப்பட்டது.

இதன் மூலம் 9,700 பேர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் விதமாக ஐக்கிய அரபு நாடுகளின் முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதைத்தொடர்ந்து தமிழகத்திற்கு புதிய தொழில்கள் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உருவானது.

தற்போதுதி.மு.க. ஆட்சிக்கு வந்து 2 ஆண்டு நிறைவு பெற்று மே 7-ந் தேதி மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ளது. இந்த மூன்றாம் ஆண்டிலும் தமிழகத்தின் வளர்ச்சிக்கு ஏராளமான திட்டங்களை செயல்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.

இதையொட்டி மீண்டும் வெளிநாடுகளுக்கு சென்று தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்த்து வர திட்டமிட்டுள்ளார். இதற்காக அடுத்த மாதம் (மே) 23-ந் தேதி லண்டன் செல்ல முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். ஜப்பான் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கும் அவர் சென்றுவரும் வகையில் பயணத்திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது.

வருகிற 2-ந்தேதி நடைபெறும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது. இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சுற்றுப்பயண விவரங்கள் விரிவாக தயாரிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையொட்டி தொழில் துறை அதிகாரிகள் லண்டன், ஜப்பான், சிங்கப்பூரில் உள்ள 20-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவன அதிகாரிகளுடன் இப்போதே பேச்சுவார்த்தை நடத்த தொடங்கி உள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு செல்லும்போது புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.